விளையாட்டு என்பது வெறும் வெற்றிக்கான போராட்டம் மட்டுமல்ல; ஒரு மனிதனின் கனவுகளையும், ஒரு கிராமத்தின் அடையாளத்தையும் உலகிற்கு எடுத்துச் சொல்லும் சக்தி வாய்ந்த ஆயுதம். அந்த உணர்வை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் திரைப்படம் தான் ‘பெத்தி’.

மலையின் அடிவாரத்தில் மறக்கப்பட்ட ஒரு சிறிய கிராமம். ரயில்வே பாதை இருந்தும் ரயில் நிற்காத நிலை, அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வாழும் மக்கள். இப்படிப்பட்ட சூழலில் வளர்ந்த நாயகன், தனது திறமையின் மூலம் தன்னையும், தனது கிராமத்தையும் உலக வரைபடத்தில் பதிய வைக்க வேண்டும் என்ற கனவுடன் வாழ்கிறார்.
மல்யுத்தம், ஓட்டப்பந்தயம், கிரிக்கெட் என மூன்று விளையாட்டுகளிலும் அசாதாரண திறமை கொண்ட அவர், வாழ்க்கையின் முக்கியமான கட்டத்தில் எதிர்பாராத தடைகளை சந்திக்கிறார். அந்த தடைகளை உடைத்து தனது இலக்கை அடைந்தாரா? தனது ஊருக்கு அவர் தேடிய அடையாளம் கிடைத்ததா? என்பதே படத்தின் உணர்வுபூர்வமான திரைக்கதை.
மூன்று பரிமாணங்களில் வரும் கதாபாத்திரங்களை உயிர்ப்புடன் வெளிப்படுத்தியிருக்கும் ராம் சரண் , தனது உடல்மொழி, உணர்ச்சி வெளிப்பாடு மற்றும் அர்ப்பணிப்பான நடிப்பால் படத்தின் மிகப்பெரிய பலமாக மாறியுள்ளார். குறிப்பாக விளையாட்டு வீரனின் போராட்டத்தையும், வெற்றிக்கான தாகத்தையும் நம்பகத்தன்மையுடன் வெளிப்படுத்தியுள்ளார்.

நாயகியாக நடித்துள்ள ஜான்விகபூருக்கு திரைக்கதையில் பெரிய அளவிலான வாய்ப்புகள் இல்லாவிட்டாலும், வரும் காட்சிகளில் தனது தோற்றத்திலும் நடிப்பாலும் ரசிகர்களை கவர்கிறார் .
மல்யுத்த பயிற்சியாளராக கம்பீரமான தோற்றத்தில் வரும் சிவராஜ்குமார், தனது அனுபவமிக்க நடிப்பால் பல காட்சிகளுக்கு வலு சேர்த்திருக்கிறார். ஜகபதி பாபு, திவ்யேந்து சர்மா போன்றவர்களும் ,அவரவர் ஏற்றுள்ள கதாபாத்திரங்களில் நன்கு நடித்துள்ளார்கள்.
இசைப்புயல் A. R. ரகுமானின் பாடல்கள் காட்சிகளுடன் ஒன்றிணைந்து ரசிக்க வைக்கின்றன. அதேபோல் அவரது பின்னணி இசை, வெற்றி-தோல்வி போராட்டங்களின் உணர்வுகளை இன்னும் ஆழமாக ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கிறது.

ஒளிப்பதிவாளர் ஆர்.ரத்னவேலு , கிராமத்தின் இயற்கை அழகையும், காட்சிகளின் பிரம்மாண்டத்தையும் ,நேர்த்தியான காட்சிகளாக பதிவு செய்துள்ளார். ஒவ்வொரு ஃபிரேமிலும் அவரது பங்களிப்பு சிறப்புற மிளிர்கிறது .
ஒரு தனிமைப்படுத்தப்பட்ட கிராமத்தின் கனவுகளையும், ஒரு விளையாட்டு வீரனின் விடாமுயற்சியையும் இணைத்து உணர்ச்சிகரமாக சொல்லியிருக்கும் இயக்குநர் புச்சி பாபு சனா, ரசிகர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் நிறைந்த திரையனுபவத்தை வழங்கியுள்ளார்.
மொத்தத்தில், ‘பெத்தி’ வெறும் விளையாட்டு திரைப்படம் அல்ல; ஒரு மனிதனின் கனவு, ஒரு கிராமத்தின் குரல், வெற்றிக்காக போராடும் ஒவ்வொருவருக்கும் அர்ப்பணிக்கப்பட்ட பிரம்மாண்டமான விஷுவல் ட்ரீட்.
