Saturday, July 25

‘சம்ஹாரம்’ -திரை விமர்சனம்

ஒரே ஒரு வீடு… ஒரே ஒரு இரவு… ஆனால் அந்த இரவில் நடக்கும் சம்பவங்கள் ஒவ்வொன்றும் அடுத்த நொடி என்ன நடக்கப் போகிறது?  என்ற பதற்றத்தை ஏற்படுத்தும்  பரபரப்பு நிறைந்த திரில்லர் படம்தான் ‘சம்ஹாரம்’.

தனது தங்கைக்கு தான் தேர்வு செய்த மாப்பிள்ளையுடன் திருமணம் நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் அண்ணன் பிரஜின். ஆனால் அந்த திருமணத்தில் விருப்பமில்லாத தங்கை ஷருமிஷா, தனது காதலனுடன் தப்பிச் செல்ல திட்டமிடுகிறார். இதே நேரத்தில், ஒரு தந்தையும் மகளும் பாதுகாப்பு கேட்டு அந்த வீட்டில் தங்க வருகிறார்கள். இரவு செல்ல செல்ல, வீட்டிற்குள் இருக்கும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு ரகசியத்தை மறைத்து வைத்திருப்பது தெரிய வருகிறது.திருமணத்திற்காக வந்த மாப்பிள்ளையை கொலை செய்ய பல திசைகளில் இருந்து திட்டங்கள் தீட்டப்படுகின்றன. இறுதியில் என்ன நடந்தது ? என்பதுதான் படத்தின் மீதி கதை .

பிரஜின் தனது கதாபாத்திரத்தில் மர்மத்தை கடைசி வரை தக்கவைத்து கவனம் ஈர்க்கிறார். அவரின் மிகையில்லாத நடிப்பு அவர் ஏற்றுள்ள கதாபாத்திரத்துக்கு பலம் சேர்த்துள்ளது .அதே போல ஷருமிஷாவும் தனது உணர்ச்சிகரமான நடிப்பால் தான் ஏற்றுள்ள கதாபாத்திரத்துக்கு வலிமை சேர்க்கும் வகையில் தனது நடிப்பை நன்கு வெளிப்படுத்தியுள்ளார் .மற்றும் வில்லனாக நடித்திருக்கும் கணேஷ் சாவரட்டில் திரையில் தோன்றும் ஒவ்வொரு முறையும் அச்சத்தை ஏற்படுத்துகிறார். அவரது தோற்றமும், உடல் மொழியும் கதாபாத்திரத்திற்கு தேவையான கொடூரத்தன்மையை முழுமையாக வெளிப்படுத்துகிறது.மேலும் நியா வர்கீஸ், ராஜ்குமார், தென்றல் ராஜா,  ராம் பிரபா.உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு ஏற்றவகையில் நன்கு நடித்துள்ளார்கள்.ஒளிப்பதிவாளர் சுரேஷ்குமார் சுந்தரம் பல்வேறு நேர்த்தியான கோணங்களில், ஒரே வீட்டை மையமாகக் கொண்டு செல்லும் கதையின் காட்சிகளை திறம்பட காட்சிப்படுத்தியுள்ளார்

வி.ஜி. ஹரி கிருஷ்ணனின் பின்னணி இசை காட்சிகளின் தன்மைக்கு ஏற்றபடி நன்கு அமைக்கப்பட்டு கதையின் நகர்வில் பதற்றத்தை அதிகரிக்க உதவியுள்ளது . சில இடங்களில் இசையின் சத்தம் சற்று அதிகமாக உணரப்பட்டாலும், அது காட்சிகளில் திரில்லர் உணர்வை கூட்டுவதில் முக்கிய பங்காவே உள்ளது .

குறைந்த கதாபாத்திரங்கள் மற்றும் ஒரே இடத்தை மட்டுமே பயன்படுத்தி, பல அடுக்குகள் கொண்ட திரைக்கதையை இயக்குநர் ராம் பிரபா அமைத்திருக்கிறார். தொடர்ந்து வரும் திருப்பங்கள் காரணமாக படம் இறுதிவரை விறுவிறுப்பாகவே நகர்கிறது.

மொத்தத்தில், ‘சம்ஹாரம்’ – ஒரு இரவுக்குள் பல ரகசியங்களையும், மர்மங்களையும் அடுக்கி வைத்து பார்வையாளர்களை சஸ்பென்ஸில் ஆழ்த்தும் திரில்லர் திரை அனுபவத்தை ரசிகர்களுக்கு நிச்சயம் தரும் .

Spread the love