Friday, April 24

’பேட்டில்’ (Battle) திரைப்பட விமர்சனம்

காதலும் இசையும் கருத்தான மெசேஜுடன் கலந்துள்ள திரைப்படம் இந்த ’பேட்டில்’.

சென்னையைச் சேர்ந்த இளைஞன் அர்ஜுன் பிரபாகரனுக்கு தான் ஒரு பெரிய ஆக வேண்டும் என்ற தீராத வேட்கை உள்ளது. இவரும் தனியார் பள்ளி ஆசிரியரான ஆராத்யாவும் காதலர்கள். தன் ஆசை கனவுகளுடன் இருக்கும் அர்ஜுன் பிரபாகரனுக்கு கிடைக்கும் சரியான வாய்ப்புகள் வாயிலாக நிறைய இசை நிகழ்ச்சிகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பம் அமைகிறது .மறுபுறம் ஆராத்யா பணிபுரியக்கூடிய தனியார் பள்ளியில் தாளாளர் சுப்ரமணிய சிவாவினால் அங்கு நிகழும் ஏராளமான  மோசடிகளால் அங்குள்ள மாணவர்களும்,ஆசிரியர்களும் பெரும் இன்னல்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அங்குள்ள மாணவி ஒருத்தி மன அழுத்ததால் தற்கொலையும் செய்து கொள்கிறாள்.அந்தப் பள்ளியில் நடக்கும் கொடுமைகளை வெளி உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காண்பிப்பதற்காக இசையின் மூலமாக வழிகாண முயலுகிறது , ஆனால் அவர்களது இந்த முயற்சிக்கு இசை நிறுவனம் தடைக்கல்லை போடுகிறது. ஆராத்யா பணிபுரியும் தனியார் பள்ளியின் தாளாளர் சுப்ரமணிய சிவாவும் இடையூறுகளை தருகிறார். இதுபோன்ற தடைகளையும் இடையூறுகளையும் நேர்கொண்டு அர்ஜுன் பிரபாகரனும், ஆராத்யாவும் தங்களுடைய இலட்சியத்தில் வெற்றி பெற்றார்களா? இல்லையா? என்பதே ’பேட்டில்’ படத்தின் மீதி கதை.

இந்தப் படத்தின் கதையின் நாயகனாக அர்ஜுன் பிரபாகரன் நடித்திருக்கிறார். பாடல் காட்சிகளில் நடிக்கும் பொழுது காட்டும் ஆர்வத்தினை மற்ற காட்சிகளிலும் இவர் வெளிப்படுத்தி இருந்தால் அது அவருக்கு இன்னமும் பிளஸ் ஆக அமைந்திருக்கும், இருப்பினும் இது அறிமுகப்படம் என்பதால் இனி வரும் படங்களில் அவர் தன்னை மெருகேற்றிக் கொள்வார் என எதிர்பார்க்கலாம். கதையின் நாயகியாக நடித்துள்ள ஆராத்யா தன்னுடைய தோற்றம் மற்றும் நடிப்பு இரண்டிலுமே பாஸ் மார்க் வாங்கி உள்ளார் . இவர் கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருந்திப் போகக் கூடிய வகையில் தன்னுடைய நடிப்பினை வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனராகவும், நடிகராகவும் திரைப்படங்களில் நமக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமாக இருக்கக்கூடிய சுப்பிரமணிய சிவா இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டலாக நடித்திருக்கிறார். மற்றும் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்க கூடிய சரவணா சுப்பையா முனீஸ்காந்த் , சுருளி போன்றவர்களும் அவரவர் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் குறைவில்லாத நடிப்பை நிறைவாக கொடுத்துள்ளார்கள் என்று சொல்லலாம் .

கதையின் நாயகன் பாடகராக அமைந்திருப்பதால் அதற்கு மேலும் பொலிவு சேர்க்கும் வகையில் படத்தின் பாடல்கள் குறிப்பாக ராப் பாடல்கள் சிறப்பாக அமைந்திருப்பதால் அது படத்திற்கு மேலும் பக்க பலமாக உள்ளது, அந்த வகையில் இசை அமைப்பாளர் ஜீவாவின் பணி ரசிக்கும்படி உள்ளது

இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருப்பவர் R . யுவராஜ் ,கதை நிகழும் சூழலுக்கு ஏற்ப,,கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்கு ஏற்ப இணக்கமான காட்சி பதிவினை படம் முழுவதும் இவர் தனது ஒளி அமைப்பின் மூலம் நன்கு கொடுத்து இருக்கிறார் .

இன்றைய சில தனியார் பள்ளிக்கூட சூழல்களின் நிலை ,அங்கு படிக்கும் மாணவர்கள் மற்றும் பணி புரியும் ஆசிரியர்களின் கல்வி மற்றும் பணிச்சூழல் இவற்றை காதல் ,செண்டிமெண்ட் ,இசை என்ற அம்சங்களின் வாயிலாக திரைக்கதை ஆக்கம் செய்து படமாக உருவாக்கியுள்ளார் இயக்குனர் நாராயணன் பி ஏ .குறிப்பாக நிறைய இளம் கலைஞர்களை, கதாபாத்திரங்களுக்கு ஏற்ப அவர்களை தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கும் விதத்திற்காகவும், சமூக அக்கறையுடன் கூடிய கதைக்களத்தை எடுத்துக் கொண்டதற்காகவும் இயக்குனரை பாராட்டலாம்.

மொத்தத்தில் இந்த ’பேட்டில்’ சமூக அக்கறை கலந்த மெசேஜினை இசையின் வழியே கடத்தும் ஒரு காட்சி பதிவு.

Spread the love