இன்றைய நவீன காலகட்டத்தில் உறவுகளுக்கு இடையே ஏற்படக்கூடிய சிக்கல்களினால் ஏற்படும் இடைவெளியினை இணை திரைமொழியில் விவரித்து சொல்கிறது இந்த ’பிரேக்ஃபாஸ்ட்’.

செல்லமே ,ஆனந்த தாண்டவம் போன்ற படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்த ஏ.ஆர். காந்தி கிருஷ்ணா சில வருட இடைவெளிக்குப் பிறகு இயக்கி இருக்கக்கூடிய படம் இந்த ’பிரேக்ஃபாஸ்ட்’. கதையின் நாயகியான ரோஸ்மின் செல்வ செழிப்புமிக்க தொழில் அதிபரின் மகளாக உள்ளார். அவர் வேலை எதுவும் இன்றி சிரமப்படும் இளைஞனான ராணாவிற்கு தன்னுடைய சொந்த நிறுவனத்திலேயே ஒரு பணியினை வாங்கிக் கொடுக்கிறார்.இவர்கள் இருவரும் காதல் வசப்பட, அவர்களது காதலை ரோஸ்மினின் தந்தை எதிர்க்கிறார், ஆனால் தந்தையினுடைய எதிர்ப்பினை பொருட்படுத்தாது காதல் கொண்ட காதலனையே கைபிடித்து இல்வாழ்க்கையில் இணைகிறார் .அதன் பிறகு தனது காதல் கணவனுக்கு தன்னுடைய நிறுவனத்திலேயே உயர் பதவியும் ரோஸ்மின் வழங்குகிறார் .திருமணமான புதிதில் ஆனந்தமாக செல்லும், இவர்களது வாழ்க்கை பயணத்தில் மெதுவாக பிரச்சனைகள் தலை தூக்குகிறது அந்தப் பிரச்சினைகளின் காரணமாக இந்த காதல் தம்பதிகள் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து, ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்து விடுவது என்ற முடிவுக்கு அவர்களை கொண்டு செல்கிறது .அதன் பிறகு காதலால் கருத்தொருமித்து , கணவன் மனைவியாய் இணைந்தவர்கள், இடைக்காலத்தில் ஏற்பட்ட பிரச்சனையினால் பிரிந்து விட முடிவு செய்திருந்ததிலிருந்து மாற்றங்கள் ஏற்பட்டு மறுபடியும் அவர்கள் வாழ்க்கையில் ஒன்றிணைந்தார்களா ?இல்லையா? என்பதுதான் ’பிரேக்ஃபாஸ்ட்’ படத்தின் மீதி கதை.

’பிரேக்ஃபாஸ்ட்’ படத்தின் கதையின் நாயகனாக நடித்திருக்க கூடிய ராணவ் தன்னுடைய கதாபாத்திரத்தில் நன்கு உணர்ந்து அதற்கு ஏற்றபடி உள்ளத்தின் உணர்வுகளை இயல்பான முறையில் நன்கு வெளிப்படுத்தி உள்ளார் அறிமுக நடிகராக இருந்தாலும் கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் தேவையான நடிப்பினை இவர் வழங்கி இருக்கிறார் என்று சொல்லலாம் கதையின் நாயகியாக நடித்திருக்க கூடிய ரோஸ் மினும் தன்னுடைய தோற்றத்தாலும், நடிப்பாலும் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு நிறைவு செய்திருக்கிறார் மேலும் இந்த படத்தில் கிருத்திக் மோகன் அமைத்தார் ரங்கநாத் இணையும் நன்றாக நடித்துள்ளார்கள். மேலும் மிடுக்கான நாயகியின் அப்பாவாக சம்பத்ராஜ், கனிவான நாயகனின் அம்மாவாக அர்ச்சனா மற்றும் கஸ்தூரி போன்றவர்களும் அவரவர்களுக்கான கதாபாத்திரங்களில் குறைவிலாத நடிப்பினை வழங்கி இருக்கிறார்கள்.

இந்தப் படத்திற்கு இசை ஜி வி பிரகாஷ் குமார். கவிப்பேரரசு வைரமுத்து மற்றும் கவிஞர் விவேக் போன்றவர்களின் பாடல் வரிகளில் உருவாகி இருக்கக்கூடிய பாடல்கள் பார்ப்பதற்கும் ,கேட்பதற்கும் இனிமையாக உள்ளன .பின்னணி இசை கதாபாத்திரங்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் கதையோடு பயணித்துள்ளது. M.V பன்னீர்செல்வத்தின் ஒளிப்பதிவானது கதைக்கும், காட்சிகளுக்கும் இணக்கமான பின்புலத்தை தரக்கூடிய வகையில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.மேலும் குறிப்பாக பாடல் காட்சிகளில் ,வண்ணமயமான ஃப்ரேம்களில் நேர்த்தியான கேமரா கோணங்களுடன் கண்களுக்கு விருந்தாய் காட்சிகளை அவர் பதிவு செய்துள்ளார்.
வாழும் காலகட்டங்கள் மாறினாலும், இரு மனங்களுக்கு இடையே ஏற்படும் காதல் உணர்வானது என்றும் மாறாமல் இருந்தாலும் ,இந்த நவீன யுகத்தில் திருமணத்திற்கு பிறகான வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்கள் ஒன்றுபட்ட மனங்களுக்கு இடையேயான பிரிவுகள் இவற்றை மையப்படுத்தி கதையினை அமைத்து அதனை திரைமொழியில் சொல்லி இருக்கிறார் இயக்குனர் காந்தி கிருஷ்ணா. காதல் வசப்பட்டு இருப்பவர்களுக்கும், அந்நிலையிலிருந்து தம்பதிகளாக மாறவிருக்கும் இளம் ஜோடிகளுக்கும் இந்த படம் நிச்சயமாக ஒரு மெசேஜினை சொல்லும்.
மொத்தத்தில் இந்த ’பிரேக்ஃபாஸ்ட்’ காதலர்களும்,இளம் தம்பதியரும் தங்கள் இணையோடு இணைந்து பார்க்க வேண்டிய திரைப்படம்.
