Friday, April 17

‘மிஸ்டர் எக்ஸ்’ (Mr.X) திரைப்பட விமர்சனம்

உளவாளிகள் பற்றிய கதையினை காட்சி வடிவில் நம் கண் முன்னே நிறுத்துகிறது இந்த மிஸ்டர் எக்ஸ்.

இந்தியாவின் வெளிநாட்டு உளவு அமைப்பான “ரா”வில் பணியாற்றும் திறமையான உளவாளி சரத்குமார், அவர் அணு ஆயுத மூலப்பொருளை பல ஆண்டுகளாக ரகசியமாக பாதுகாத்து வருகிறார். இதன் பொருட்டு பல நாடுகள் மாறி அதை பாதுகாப்புடன் அவர் மறைத்து வைத்திருந்தாலும் , எதிர்பாராத திருப்பமாக ரஷ்ய ராணுவம் அவரை கைது செய்வதுடன், அந்த மூலப்பொருளையும் கைப்பற்றி பாகிஸ்தானுக்கு அனுப்ப திட்டமிடுகிறது. ஆனால் சரத்குமார்மற்றும் அணு ஆயுத மூலப்பொருளை இந்தியாவிற்கு கொண்டு வர , ரா அதிகாரியான மஞ்சு வாரியரின் சிறப்பு குழு களமிறங்குகிறது. ஆனால் அந்த முதல் முயற்சி தோல்வியில் முடிந்து, மஞ்சு வாரியர் மீது எழும் சந்தேகத்தினால் இந்திய பாதுகாப்புத்துறை அவரை கைதும் செய்கிறது. ஆனால் அங்கிருந்து தப்பிக்கும் அவர், உளவாளி ஆர்யாவின் உதவியுடன் மீண்டும் அந்த செயலை செய்து முடிக்கும் முயற்சியில் களம் இறங்குகிறார். அதன்படி ஆர்யா தனது நண்பர்களுடன் போராடி அணு ஆயுத மூலப்பொருளை கைப்பற்றி இந்தியாவிற்கு எடுத்து வரும் திட்டம் என்னவாயிற்று ?சரத்குமாரை அவர்களால் காப்பாற்ற முடிந்ததா ? அதன்பின் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதி கதை .

சரத்குமார் ஏற்று நடித்திருக்கும் கதாபாத்திரம், ஆங்கிலபடங்களில் வரும் ஒரு அனுபவமிக்க உளவாளியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.இது சரத்குமாருக்கு 172 வது படமாம் . நாயகனாக நடித்திருக்கும் ஆர்யாவின் நடிப்பு அவரது வழக்கமான் பாணி நடிப்பில் அமைந்து இருந்தது ,சரத்குமார் மற்றும் ஆர்யா இருவரின் உடல் தோற்றமும், ஆக்‌ஷன் காட்சிகளில் அவர்களது பங்களிப்பும் அவர்கள் ஏற்றுள்ள கதாபாத்திரங்களுக்கு பெரும் பலம் சேர்த்துள்ளது .மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள கெளதம் ராம் கார்த்திக், புதிய பரிமாணத்தில் பரிமளித்துள்ளார் ஆனால் அவர் இன்னமும் தன்னுடைய கதாபாத்திரத்தை நன்றாக பயன்படுத்திக்கொண்டு இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது .ரா அதிகாரி கதாபாத்திரத்தில் மஞ்சு வாரியரின் நடிப்பும் மற்றும் ரைய்சா வில்சன், அதுல்யா ரவி, காளி வெங்கட், அனேகா, ஜெயப்பிரகாஷ் போன்றவர்களின் நடிப்பும் குறைகாண இயலாத வண்ணம் நன்கு உள்ளது

ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட் ,பிரமாண்டமான லொகேஷன்கள், கிளீன் ஃப்ரேம்ஸ், நேர்த்தியான கோணங்கள் என காட்சிப்படுத்தி ரசிகர்களுக்கு பெரிய திரை அனுபவத்தை கொடுத்துள்ளார்.பின்னணி இசையை பொருத்தமட்டில் காட்சிகளுக்கு உயிரோட்டம் கொடுக்க வேண்டிய இடங்களில் குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் திபு நினன் தாமஸின் முயற்சி நன்றாக வெளிப்பட்டுள்ளது .படத்தொகுப்பாளர் பிரசன்னா G.K-வின் பணி, காட்சிகளின் வேகத்துக்கு உறுதுணையாக அமையப்பெற்றுள்ளது .ஆனால் என்னதான் வலுவான தொழில் நுட்ப கூட்டணி இருந்தாலும் திரைக்கதைக்கு அது மட்டுமே முழுமையான பலத்தை தர முடியவில்லை .

நம் நாட்டில் ,வேற வேற காலகட்டத்தில் நடைபெற்ற ஏழு உண்மை சம்பவங்களை மையப்படுத்தி இந்த படத்தை இயக்குனர் மனு ஆனந்த் உருவாக்கியுள்ளார்.உளவாளி கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தின் , கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தோற்றத்தினை தரக்கூடிய நடிகர்களை தேர்வு செய்து ஆங்கில பட பாணியில் இந்த படத்தை அவர் இயக்கியுள்ளார். தொழில்நுட்ப அளவில், காட்சிகளில் கையாளப்பட்டிருக்கும் பிரம்மாண்டம் ,திரைக்கதையிலும் அமைக்கப்பட்டிருந்தால், அது படம் பார்க்கும் ரசிகர்களுக்கு படத்தின் மீதான ஈர்ப்பை இன்னமும் அதிகப்படுத்தி இருக்கும்.

மொத்தத்தில் இந்த மிஸ்டர் எக்ஸ் காட்சிகளின் வழியே மட்டும் நம் கவனத்தை ஈர்க்கும் ஒரு ஸ்பை திரில்லர்.

Spread the love