Friday, April 17

‘ கார் மேனி செல்வம்’ -திரை விமர்சனம்

ஒவ்வொரு சாதாரண மனிதனுக்கும் இருக்கக்கூடிய கனவுகள் அதை நோக்கிய பயணம் அதில் தடுமாற்றங்கள் வரும்போது ஏற்படும் மன அழுத்தம் இவைகளை திரைமொழியில் சொல்லுகிறது இந்த ‘ கார் மேனி செல்வம்’ .

ஆசையும் அழகும் நிறைந்த குடும்பத்தின் தலைவனாக உள்ள சமுத்திரகனி ,கார் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார் .அமைதியும், மகிழ்ச்சியுமாக சென்று கொண்டிருந்த அவரது வாழ்க்கையில் தனக்கென்று சொந்தமாக வீடு,கார் வாங்க வேண்டும் என்னும் ஆசை கனவிற்காக கடன் வாங்கும் சமுத்திரகனி பெரிய சிக்கலில் சிக்கிக் கொள்கிறார். அதிலிருந்து அவரால் மீள முடிந்ததா? இல்லையா? என்பதை ய.தார்த்தமான கதையாக பதிவு செய்துள்ளது கார் மேனி செல்வம் படம்.

இந்தப் படத்தில் கதையின் நாயகனாக செல்வம் என்னும் கதாபாத்திரத்தில் சமுத்திரகனி நடித்துள்ளார்  நாம் சமூகத்தில் அன்றாட ம் பார்க்கக்கூடிய, பழகக்கூடிய ஏன் சில சமயத்தில் நம்மையே பிரதிபலிக்க கூடிய கதாபாத்திரங்களில் நடிப்பது அவருக்கு கைவந்த கலை என்பதை இந்தப் படத்திலும் அவர் பதிவு செய்திருக்கிறார். அவரது மனைவியாக நடித்துள்ள லட்சுமி பிரியா சந்திரமௌலி இன்றைய காலகட்டத்தில் எளிய குடும்பங்களை நகர்த்திச் செல்லும் குடும்பத் தலைவிகளின் பிரதிநிதியாக நிறைவாக தன் நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார், மேலும் குறிப்பிட்டுச் சொல்லத் தகுந்த வகையில் சமுத்திரகனியின் முதலாளியாக நடித்திருக்க கூடிய கௌதம் வாசுதேவ் மேனன், அவருடைய மனைவியாக நடித்துள்ள அபிநயா என ஒவ்வொருவரும் அவரவர் கதாபாத்திரங்கள் வாயிலாக நிறைவான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள் .மற்றும் கரண் சக்கரவர்த்தி சமுத்திரகனியின் மகனாக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

கனவுகளை சுமந்து கொண்டு வாழும் எளிய மனிதனின் வாழ்வியலை ,அவர் வாழும் சூழலை சிறப்பான காட்சி அமைப்புகளுடன் படமாக்கி உள்ளார் ஒளிப்பதிவாளர் யுவராஜ் தர்ஷன். படத்தின் பாடல்களையும் பின்னணி இசையையும் கதைக்கும் ,காட்சிகளுக்கு ஏற்ற வகையில் பயணிக்க வைத்து கதாபாத்திரங்களுக்கு வலு சேர்த்துள்ளது மியூசிக் லவ் ஸ்டுடியோ அண்ட் டெக்னாலஜி -யின் இசையில் அமைந்துள்ள பாடல்களும் பின்னணி இசையும்.ஒவ்வொரு எளிய தனி மனிதனுக்கும் தனக்கும் தன் குடும்பத்திற்கும் உயர்வினை தரக்கூடிய கனவு கண்டிப்பாக தேவைதான் ஆனால் சில தேவையற்ற தகுதிக்கு மீறிய ஆசை கனவுகள் அந்த தனி மனிதனை எப்படி சிக்கலான பாதைக்கு தள்ளி செல்கிறது என்பதை சிந்திக்க கூடிய வகையில் படமாக்கி உள்ளார் இயக்குனர் ராம் சக்ரி.

.படத்தொகுப்பாளர்கள் ஜெகன் ஆர் வி மற்றும் தினேஷ் எஸ் ஆகியோர் மற்றும் கலை இயக்குநர் சங்கர் போன்றவர்களின் ஒத்துழைப்பு படத்தின் காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.

மொத்தத்தில் இந்த ‘ கார் மேனி செல்வம்’ ஒரு சராசரி மனிதனின் வாழ்வியல் சம்பவங்கள் மூலம் சில சிந்திக்கவைக்கும் கருத்துக்களோடு சொல்லப்படும் கதை.

Spread the love