Thursday, April 16

ஹேப்பி ராஜ் -திரைவிமர்சனம்

தன்னுடைய உருவம் பிறரால் கேலி செய்யப்படக்கூடிய வகையில் உள்ள ஒரு தந்தை,அந்த தந்தையின் தோற்றத்தால் தான் அவமானப்படுவதாக நினைத்து அவரை விட்டு விலகி வாழும் மகன் இவர்களது வாழ்க்கைச் சம்பவங்களை இந்த படம் பேசுகிறது .

.படத்தில் அன்பான தந்தையாக காத்தமுத்து என்னும் கதாபாத்திரத்தில் ஜார்ஜ் மரியன் நடித்துள்ளார்,தன்னுடைய உருவம் பிறரால் கேலிக்குள்ளாக்கப்பட்டாலும், தன்னுடைய மகன் மீது அளவற்ற பாசம் கொண்டவராக இருக்க கூடிய தந்தை. ஆனால் அவரது மகன் ஜிவி பிரகாஷ் அவரை விட்டு விலகி பெங்களூரில் வேலைக்கு செல்கிறார் ,அங்கு ஸ்ரீ கௌரி பிரியாவை காதலிக்கிறார், ஸ்ரீ கௌரி பிரியாவின் தந்தை அப்பாஸ் பெரும் செல்வந்தர். அவர் மகளின் காதலை ஏற்றுக் கொண்டாலும் ,ஜார்ஜ் மரியனின் உருவத்தை வைத்து அவரை அவமானப்படுத்தி விடுகிறார், இதனால் ஏற்படும் மோதலினால் திருமணம் நின்று போய் விடுகிறது. இதன் பிறகு ஜி வி பிரகாஷ் என்ன செய்கிறார் ? நின்று போன திருமணம் மீண்டும் நடைபெற்றதா ?இல்லையா? இது போன்ற கேள்விகளுக்கு விடையினை தருகிறது ஹேப்பி ராஜ் படத்தின் மீதி கதை.

இதுவரை பல திரைப்படங்களில் சிறு மற்றும் துணை கதாபாத்திரங்களில் தன்னுடைய நடிப்புத் திறனை வெளிப்படுத்தி வந்த ஜார்ஜ் மரியனுக்கு இந்த திரைப்படத்தில் காத்தமுத்து என்னும் ஒரு ஆழமான கதாபாத்திரத்தை செய்யக்கூடிய வாய்ப்பு நன்கு கிடைத்துள்ளது ,அவரும் அந்த கதாபாத்திரத்தை அழகாக உள்வாங்கி தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி கதாபாத்திரத்திற்கு பலம் செய்துள்ளார்.

கதை நாயகனாக நடித்துள்ள ஜிவி பிரகாஷ் தனது தந்தை மீது கோபம் மற்றும் பாசம் என மாறுபட்ட பரிமாணங்களில் தன்னுடைய சிறப்பான நடிப்பை அழகுற வெளிப்படுத்தி உள்ளார்.இதுபோன்ற கதாபாத்திரங்களில் தன்னுடைய நடிப்பினை அசால்ட்டாக வெளிப்படுத்து ஜீவிக்கு கை வந்த கலை, அதனை படம் முழுவதும் அவரது கதாபாத்திரத்தில் பார்த்து ரசிக்க முடிகிறது  .நாயகியாக ஸ்ரீ கௌரி பிரியா நடித்துள்ளார், காதலன், தந்தை என இரண்டு கதாபாத்திரங்களுக்கு இடையே பயணிக்கும் கதாபாத்திரத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பினை இவரும் சரியாக பயன்படுத்தி உள்ளார் என்று சொல்லலாம். இந்தப் படத்தில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒரு விஷயம்,நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் அப்பாஸ் திரையுலகில் மறுபிரவேசம் கொடுத்துள்ளார். நாயகியின் மிடுக்கான தந்தையாக படத்தில் வலம் வரும் இவர் இந்த படத்தின் மூலம் மீண்டும் தமிழ் திரைப்படங்களில் பல கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிப்பார் என்று எதிர்பார்க்கலாம் , மேலும் மதுரை முத்து,கீதா கைலாசம் என பிற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் அவரவர் கதாபாத்திரங்களில் குறைவில்லாத நடிப்பை கொடுத்துள்ளார்கள் .

மதன் கிறிஸ்டோபர் இந்த படத்திற்கு ஒளிப்பதிவினை அமைத்துள்ளார்,கண்களுக்கு இனிய காட்சிகளை நேர்த்தியான முறையில் படமாக்கியுள்ளார் படத்தின் பாடல்களைப் பொறுத்தவரை இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனின் பங்களிப்பானது, பாடல்களை விட பின்னணி இசையில் கதையோட்டத்துடன் நன்கு பயணித்துள்ளது.

படத்தின் இயக்குனர் மரியா ராஜா இளஞ்செழியன் ,ஒருவரின் புறத்தோற்ற உருவம் ,அவரின் மதிப்பை நிர்ணயம் செய்யாது,,மாறாக அவரின் உண்மையான அன்பு மற்றும் மனித நேயம் தான் சமூகத்தில் முக்கியமான இடத்தை வகிக்கும் என்னும் வலுவான கருத்தை, எளிமையான கதை மூலமாக இயக்குனர் வெளிப்படுத்தியுள்ளார்.படத்தில் இடம் பெற்று இருக்கக்கூடிய தந்தை, மகன் கதாபாத்திரத்தின் இணைப்பானது ,படம் பார்க்கும் ரசிகர்களுடன் தனிப்பட்ட தொடர்பை உருவாக்கும் வகையில் உள்ளது

மொத்தத்தில் இந்த ஹேப்பி ராஜ், சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கக்கூடிய நல்லதொரு பேமிலி என்டர்டெய்னர் மூவி.

Spread the love