Monday, May 25

’கஃபுல் பிரண்ட்லி’ (Couple Friendly)- திரைவிமர்சனம்

வாழ்வியல் போராட்ட காதல் கதை.

இன்டீரியர் டிசைனர் ஆகி சாதிக்க வேண்டும் என்ற பெரும் கனவோடு சென்னைக்கு வரும் இளைஞன் சந்தோஷ் ஷோபனும், ஐடி துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசைகளோடு சென்னைக்கு வரும் மானசா வாரணாசியும் ஒரு கட்டத்தில் ஒரே இடத்தில் தங்கக்கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது. அதன் பின்னர் சந்தோஷ் ஷோபன் தான் நினைத்தபடி தனது துறையில் வெற்றி பெறுகிறார். மானசாவும் தன்னுடைய ஆசைப்படியே ஐடி துறையில் பணிபுரியும் வாய்ப்பு பெறுகிறார். ஆசைக்கனவுகள் நிறைவேறியபின் இருவரும் காதல் கனவுகளோடு வாழ்க்கையை நடத்தி வரும் வேளையில் அவர்களுக்கு இடையே ஏற்படும் ஒரு சிறிய ஊடல் ஏற்பட அது அவர்களது காதல் கனவுகளுக்கு முட்டுக்கட்டை போடுகிறது. இதன்பின் என்ன நடந்தது என்பது தான் ’கஃபுல் பிரண்ட்லி’ படத்தின் மீதி கதை .

கனவுகளை நெஞ்சங்களில் சுமந்து கொண்டு சென்னைக்கு வரும் இளைஞன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சந்தோஷோபன் ,கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு ஏற்ற வகையில் நிறைவாக நடித்துள்ளார் .ஆசை கனவுகளை கண்களில் சுமந்தவாறு சென்னைக்கு வரும் கதையின் நாயகி மானசாவும் கதாபாத்திரத்தோடு ஒன்றி இயல்பாக நடித்துள்ளார்.இருவருமே அவரவர் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் சிறப்பான நடிப்பு வெளிப்படுத்தி உள்ளார்கள்.யோகி பாபு ,சுனில் இருவரும் தங்களது பங்கிற்கு தேவையான பங்களிப்பை படத்திற்கு கொடுத்துள்ளார்கள்.

மன உணர்வுகளை சித்தரிக்கும் கதாபாத்திரங்களை கொண்டுள்ள கதைக்கு தேவையான பாடல்களையும் பின்னணி இசையினையும் இசை அமைப்பாளர் ஆதித்யா ரவீந்திரன் சிறப்பான முறையில் கொடுத்துள்ளார். உட்புற மற்றும் வெளிப்புற காட்சிகளை நேர்த்தியான கோணங்கள் மூலம் சிறப்பான முறையில் படமாக்கி பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமன். ஆசை கனவுகள், லட்சிய ஆசைகள் இவற்றோடு பயணிக்கும் இருவரின் வாழ்க்கை பயணத்தில் நடக்கும் சம்பவங்களை, வாழ்வியல் ஏற்றத்தாழ்வுகளை நயம்பட திரை வடிவில் படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் அஸ்வின் சந்திரசேகர்.

மொத்தத்தில் இந்த ’கஃபுல் பிரண்ட்லி’ இரு உள்ளங்களின் அழகிய வாழ்வியல் பயண பதிவு

Spread the love