ஆரம்ப காலத்தில் திரைப்படங்கள் மக்களுக்கு அறிமுகமான போது மௌன மொழியையே பேசி வந்தன,தமிழ் சினிமா வரலாற்றின் ஆரம்பகால திரைப்படங்களும் அப்படித்தான்.அதற்குப் பிறகு பேசும் படங்கள் வந்து வளர்ச்சியை எட்டிய பிறகும் தமிழில் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில், கலைஞானி கமலஹாசன்,அமலா நடிப்பில் 1987-ல் பேசும் படம் என்னும் பேசாத படம் ஒன்று வெளி வந்திருந்தது .அந்த படத்திற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது .அதற்குப் பிறகு பல ஆண்டுகளுக்குப் பிறகு மௌன மொழி பேசி வந்திருக்கக்கூடிய திரைப்படம் தான் இந்த காந்தி டாக்ஸ்.

வேலையின்மை ,வறுமை ,உடல்நிலை சரியில்லாத அம்மா போன்ற சூழலில் மும்பையில் வாழ்ந்து வருபவர் விஜய் சேதுபதி ,தொழிலில் ஏற்பட்ட கடன் நெருக்கடியில் தத்தளிக்கும் நபராக அரவிந்த்சாமி உள்ளார். இப்படி மாறுபட்ட சூழலில் வாழ்க்கை பயணத்தை நடத்திச் செல்லும் இருவரும் சந்தித்துக் கொள்ளும் தருணத்திற்கு பிறகு அவர்களது வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை விவரிக்கிறது காந்தி டாக்ஸ் படத்தின் மீதி கதை.
தான் பேசும் வசனங்களால் மற்றும் வசனங்களை வெளிப்படுத்தும் தன்மையால் ரசிகர்களை பல படங்களில் தன் வசமாக்கி இருந்த விஜய் சேதுபதி, இந்த திரைப்படத்தில் தன்னுடைய முக பாவனைகள் மற்றும் மௌன மொழியின் மூலம் தன்னுடைய கதாபாத்திரத்தை இயல்பான முறையில் அழகுற வெளிப்படுத்தி, ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கிறார். நடிகர் அரவிந்தசாமியும் தன்னுடைய பண்பட்ட அனுபவ நடிப்பினை வார்த்தைகளின்றி விழிகளால் பேசி, தான் ஏற்றுள்ள கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்துள்ளார் மற்றும் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய கதாபாத்திரத்தில் சித்தார்த் ஜாதவ் நடித்திருக்கிறார், இவரது உடல் மொழி ரசிகர்களை ரசித்து சிரிக்க வைத்திருக்கிறது .நாயகியாக நடித்துள்ள அதிதிராவும் தனக்கு கொடுக்கப்பட்ட காட்சிகளில் நிறைவான நடிப்பை கொடுத்துள்ளார்.
வசனங்கள் இல்லாத காட்சிகளுக்கு தக்கதொரு பின்புலத்தை தனது கேமரா கோணங்கள் மூலம் அழகாக பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கரண் பி ராவத். பொதுவாகவே கதையில் இடம்பெறும் காட்சிகளுக்கு இணக்கமான பின்புலத்தை தருவதில் பின்னணி இசையின் பங்கு மிக முக்கியமானது ,அதிலும் குறிப்பாக இதுபோல மௌன மொழி பேசி வரும் திரைப்படங்களுக்கு பின்னணி இசை என்பது மிக மிக முக்கியமானது .அந்த வகையில் இந்தப் படத்தின் காட்சிகளை தன் பின்னணி இசையால் மெருகேற்றி உள்ளார் இசை அமைப்பாளர் ஏ ஆர் ரகுமான்.
இந்த படத்தினை எழுதி இயக்கியிருப்பவர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் . கதாபாத்திரங்களை பேச வைக்காமல் ,அவர்களின் உணர்வுகளை உடல் மொழியாலும், முகபாவனைகள் மூலமாகவும் வெளிப்படுத்தும் வகையில் காட்சிகளை அமைத்திருப்பது பாராட்டுக்குரியது. அதிலும் குறிப்பாக இரு பெரும் நடிகர்களை இணைக்கும் கதையில் இந்த முயற்சியை அவர் எடுத்திருப்பது பெரும் முயற்சி. தற்போதைய திரை ரசிகர்களுக்கு இந்தப் படம் ஒரு புதிய அனுபவத்தை நிச்சயமாக கொடுக்கும்.
மொத்தத்தில் இந்த பேசாத படத்தை பற்றி வித்தியாசமான படங்களை ரசிக்கும் திரை ரசிகர்கள் பேசுவார்கள்
