தினேஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் “கருப்பு பல்சர்”

சுத்திகரிக்கப்பட்ட நீரை விற்பனை செய்து வரும் கதையின் நாயகன் அட்டகத்தி தினேஷ் நாயகி ரேஷ்மாவை மேட்ரிமோனியல் மூலமாக சந்தித்து பின்பு காதலிக்கிறார்கள். ரேஷ்மாவிடம் தினேஷ் தன்னிடம் கருப்பு பல்சர் ஒன்று இருப்பதாக பொய் ஒன்றை கூறி விடுகிறார், அந்த பைக்கில் தினேஷுடன் பயணிக்க வேண்டும் என்ற ரேஷ்மாவின் ஆசையினை நிறைவேற்றுவதற்காக பழைய கருப்பு பல்சர் ஒன்றையும் தினேஷ் விலைக்கு வாங்குகிறார். ஆசையாக பைக் வாங்கிய பிறகு தினேஷின் வாழ்க்கையில் பலவிதமான அமானுஷ்ய சம்பவங்கள் ஒன்றின் மேல் ஒன்றாக நடக்கின்றன அந்த பைக்கின் பின்புலக் கதை என்ன?அதன் பின் தினேஷ் வாழ்வில் நடந்த சம்பவங்கள் என்ன? என்பதே படத்தின் மீதி கதை.
படத்துக்கு படம் தன்னுடைய நடிப்பில் நல்லதொரு ஏற்றத்துடன் பயணிக்கும் தினேஷ் ,இந்த படத்தில் நாயகனாக நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்,லப்பர் பந்து படத்தின் வெற்றிக்குப்பிறகு மதுரை கிராமத்து இளைஞன் மற்றும் சென்னை மாடர்ன் இளைஞன் என இரண்டு மாறுபட்ட தோற்றங்களில் நன்கு நடித்துள்ளர் தினேஷ். நாயகியாக நடித்துள்ள ரேஷ்மா வெங்கடேஷ் ,சராசரி நாயகியாக படத்தில் வலம் வந்திருந்தாலும் குறைவில்லாத நடிப்பை கொடுத்திருக்கிறார். மேலும் மதுனிகா,மன்சூர் அலிகான், சரவண சுப்பையா, கலையரசன் கண்ணுசாமி போன்றவர்களும் அவரவர் கதாபாத்திரங்களில் குறை காண இயலாத நடிப்பை வழங்கி இருக்கிறார்கள் என்று சொல்லலாம்.
ஜல்லிக்கட்டு போட்டியினை ஒளிப்பதிவாளர் பாஸ்கர் ஆறுமுகம் சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளார் இன்பாவின் இசையில் பாடல்களை விட பின்னணி இசை ரசிகம்படி உள்ளது.இயக்குனர் முரளி கிரிஷ் எஸ் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.மதுரை பின்னணியில் கருப்பு காளையுடன் வாழும் ஒரு இளைஞனும் , சென்னையில் பல்சருடன் வாழும் இளைஞனும் சந்திக்கும் போது அவர்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள், அதிலிருந்து அவ்ர்கள் எப்படி மீண்டார்கள் என்னும் கதையினை எடுத்துக்கொண்டு ,கதாபத்திரங்களுக்கு ஏற்ப நடிகர்களை தேர்வு செய்து நடிக்க வைத்திருப்பதிலும், காட்சிகளை நன்கு படமாக்கி இருந்த விதத்திலும் இயக்குனர் வெற்றி பெற்றிருக்கிறார்.
மொத்தத்தில் இந்த கருப்பு பல்சரின் ஓட்டம் ரசிக்கும்படி உள்ளது
