சரியான அளவில் சிறந்த கை பக்குவத்துடன் திகட்டாத சர்க்கரை பொங்கலாய் வெளிவந்திருக்கும் படம் தலைவர் தம்பி தலைமையில்.

பஞ்சாயத்து தலைவராய் இருக்கிற ஜீவா வரப்போற எலக்சன்ல மறுபடியும் ஜெயிக்கணும்னு நினைக்கிறாரு, இதுனால ஊர்ல நடக்கிற எல்லா விசேஷங்களிலேயும் ஒன்னு விடாம தவறாம கலந்துக்கிட்டு ,அங்க பல ஏற்பாடுகளை செஞ்சு கொடுத்து ,எல்லாருடைய மனசுலேயும் இடம் பிடிக்கிறாரு, இந்த சூழ்நிலையில் அதே ஊர்ல இளவரசு மற்றும் தம்பி இராமையா ரெண்டு பேரும் பக்கத்து பக்கத்து வீட்ல இருக்காங்க ,ஆரம்பத்துல ரெண்டு பேரும் நண்பர்களா இருந்தாலும் ,பின்னாடி நடந்த ஒரு சம்பவத்துனால ரெண்டு பேருக்கும் இடையே மன வருத்தம் ஏற்படுது ,இந்த மன வருத்தம் பழி வாங்கணும் என்கிற நிலைமை வரைக்கும் போகுது ,பக்கத்து பக்கத்து வீடா இருந்தாலும் எல்லைக்கோடு வரையாத அளவுக்கு ரெண்டு பேரும் தனித்தனியா வாழ்ந்துகிட்டு இருக்காங்க, இந்த நேரத்துல இளவரசு தன்னுடைய பொண்ணுக்கு கல்யாணம் பண்ணனும்னு முடிவு பண்றாரு இந்த கல்யாண வேலைகளை எல்லாத்தையும் சிறப்பா செஞ்சு முடிக்கணும்னு அவர் ஜீவா கிட்ட சொல்றாரு ,ஜீவாவும் அதுக்கான ஏற்பாடுகளை செய்கிறார், அடுத்த நாள் காலையில கல்யாண நடக்க இருக்கிற சூழ்நிலையில் தம்பி ராமையா வின் அப்பா இறந்து போறாரு, தம்பி ராமையாவும் ஜீவாகிட்ட தன்னோட அப்பாவ சிறப்பான முறையில் ஊர்வலமா எடுத்துக்கிட்டு போகணும்,அதுக்கான பொறுப்பு உன்னோடது தான் அப்படின்னு ஜீவா கிட்ட சொல்றாரு ,இது ரெண்டையும் கேட்ட ஜீவா என்ன பண்றதுன்னு தெரியாம முழிக்கிறாரு ,ரெண்டு பேர்கிட்டயும் எவ்வளவோ பேசி பார்க்கிறார். ஆனால் கல்யாணத்தையும் தள்ளி போட முடியாது அப்படின்னு இளவரசும் , கரெக்டான நேரத்தில் தான் பிரேதத்தை எடுப்பேன் அப்படின்னு சொல்ற தம்பி ராமையாவும் பிடிவாதமா இருக்க, என்ன பண்றது?? என்ன முடிவு எடுக்கிறது என்று ஜீவா தவிக்கிறார், ஒரு பக்கம் கல்யாணம், மறுபக்கம் இறப்பு ,சூழ்நிலையை பயன்படுத்தி பல பேரும் பல பிரச்சினைகளை உருவாக்குறாங்க ,இந்த பிரச்சனைகளை, அதனால ஏற்படக்கூடிய சிக்கல்களை எல்லாத்தையும் எப்படி சமாளிச்சு இரண்டு சம்பவங்களையும் ஜீவா நடத்தி வைத்தாரா? இல்ல அந்த முயற்சிகளில தோல்வி அடைஞ்சாரா ? அப்படிங்கறதுதான் இந்த தலைவர் தம்பி தலைமையில் படத்தினுடைய மீதி கதை.
நடிகர் ஜீவா இந்த படத்துல கதையின் நாயகனாக நடிச்சிருக்காரு, இது அவருடைய 45 ஆவது திரைப்படம். ஏற்கனவே பல படங்களில் ,காமெடி கலந்த கதாபாத்திரங்கள் மூலமாகவும் சில படங்களில ஆக்ஷன் கதாபாத்திரங்கள் மூலமாகவும் , சிறப்பாக தன்னோட நடிப்பை வெளிப்படுத்தி, ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து இருக்கிற ஜீவா ,இந்த படத்திலும் புதிய பரிமாணங்களில், பல்வேறு விதமான சூழ்நிலைகளை தன்னுடைய நடிப்பின் மூலமாக சமாளிக்கிற கதாபாத்திரத்தில் ரொம்ப அழகா, யதார்த்தமா, அலட்டிக்காம அவருக்கே உரித்தான பாணியில சிறப்பாக வெளிப்படுத்தி இருக்காரு ,ஒவ்வொரு காட்சிகளிலேயும் ஏற்படுற புது விதமான திருப்பங்களுக்கும் ,பிரச்சனைகளுக்கும் அவர் தன்னோட நடிப்பின் மூலமாக சமாளிக்கிற விதம் நம்மை சபாஷ் சொல்ல வச்சிருக்குது , வழக்கமான கமர்சியல் கதாநாயகனா இல்லாம நடிச்சிருக்க ஜீவாவோட இந்த திரை பயணம் மேலும் வெற்றி பயணமாக தொடரட்டும்.
இந்த பாடத்தில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய ரெண்டு மைய கதாபாத்திரங்களில் , நடிகர் இளவரசும்,தம்பி ராமையாவும் ரெண்டு தூண்களாக நின்னு, தங்களுடைய அனுபவம் வாய்ந்த நடிப்பை படம் முழுவதும் வெளிப்படுத்தி இருக்காங்க ,இந்தப் படத்துல சௌமியா அப்படிங்கிற கதாபாத்திரத்துல ஒரு மணப்பெண் கதாபாத்திரத்தில் பிரார்த்தனா நாதன் நடிச்சிருக்காங்க ,கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து அதற்கேற்ற வகையில் தன்னுடைய இயல்பான நடிப்பை சிறப்பாக இந்த படத்துல அவங்க வெளிப்படுத்தி இருக்காங்க,மேலும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய கதாபாத்திரத்தில் ஜென்சன் திவாகர் மற்றும் ஜெய்வந்த், மணிமேகலை, ராஜேஷ் பாண்டியன், சுபாஷ் கண்ணன், அமித் மோகன், அனு ராஜ், சரத் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிச்சிருக்காங்க ,அவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் கதாபாத்திரங்களில் குறைவில்லாத நடிப்பை படம் முழுவதும் கொடுத்து இருக்கிறாங்க,ஏற்கனவே இணைய தளங்கள் வழியாக பிரபலமான நடிகர்களும் படத்தில இடம் பெற்று இருப்பது படத்துக்கு மேலும் ப்ளஸ் ஆக அமைந்துள்ளது .
படத்தினுடைய காட்சிகள் பெரும்பாலும் இரவு நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது ,அத்தகைய காட்சிகளுக்கு ஒளிப்பதிவாளர் பப்லு அஜுவின் ஒளிப்பதிவு சிறப்பான முறையில் படமாக்கம் செய்ய பெரிதும் உதவி செய்திருக்கிறது,விஷ்ணு விஜய் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார் அவரது இசை கதையின் காட்சிகளுக்கு வலுவான பின்புலத்தினை கொடுத்திருக்கிறது
இரண்டு வீடு ஒரு பெரிய தண்ணீர் தொட்டி மற்றும் குறிப்பிட்ட சில கதாபாத்திரங்கள் என அனைத்தையும் வழக்கமான திரைக்கதை பாணியில் இருந்து விலக்கி , படத்தினுடைய கதையை கதாநாயகனாக்கி ஒரு முழு நீள பொழுதுபோக்கு படமாக ரசிக்கும் வகையில் இந்த படத்தினை இயக்குனர் நிதிஷ் சகாதேவ் இயக்கியிருக்கிறார் .கதை மட்டும் நன்றாக இருந்தால் அதை ஒரு கமர்சியல் படமாகவும் மாற்ற முடியும் என்கிற தன்னம்பிக்கையோடு,மக்களையும் மகிழ்வித்து, இந்த பொங்கலுக்கு விருந்தாய் இந்த திரை பொங்கலை திகட்டாத அளவுக்கு ,கொடுத்திருக்கும் இந்த இயக்குனர் தொடர்ந்து பல தமிழ் திரைப்படங்களை இயக்க தாராளமாய் வாழ்த்து சொல்லுவோம்.
பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இந்த பீல் குட் ஃபேமிலி என்டர்டைனரை குடும்பத்தினருடன் பார்த்து ரசிக்கலாம்.
