Thursday, April 23

‘மதராஸி’ -திரை விமர்சனம்

சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், வித்யூத் ஜம்வால்,பிஜூ மேனன், சபீர் கல்லரக்கல், விக்ராந்த் மற்றும் பலர் நடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ள படம் ‘மதராஸி’

துப்பாக்கிகளை கண்டெயினர்களில் எடுத்துக்கொண்டு தமிழகத்தில் ஒரு கும்பல் ஊடுருவதாக என் ஐ ஏ அதிகாரி பிஜூ மேனனுக்கு கிடைக்கும் தகவலால் அந்த முயற்சியை தடுப்பதில் தோல்வியே மிஞ்சுகிறது. அப்படி கொண்டுவரப்பட்ட துப்பாக்கிகளை சென்னையில் உள்ள ஒரு தொழிற்சாலையில் மறைமுகமாக பதுக்கி வைக்கிறார்கள் ,இதற்கிடையில் காதல் தோல்வியினால் தற்கொலைக்கு முயலும் சிவகார்த்திகேயனைக் கொண்டு அந்த துப்பாக்கிகளை அழித்துவிட காவல் அதிகாரி பிஜூ மேனன் திட்டமிடுகிறார் அதன்படி அந்த தொழிற்சாலைக்குள் செல்லுகிறார் சிவகார்த்திகேயன், இந்த சமயத்தில் சிவகார்த்திகேயன் மனநலம் பாதிப்படைந்தவர் என்பதும் தெரிய வருகிறது, அதிகாரிகள் சொன்னபடி தொழிற்சாலைக்குள் செல்லும் சிவகார்த்திகேயன் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகளை அழித்தாரா ? இல்லையா ? என்பது தான் படத்தின் மீதி கதை.

ரொமான்ஸ், காமெடி, ஆக்சன் என பல பரிமாணங்களில் சிறப்பான தன் நடிப்பை வெளிப்படுத்த சிவகார்த்திகேயனுக்கு இந்த படத்தில் அவர் ஏற்று இருக்கும் ரகு என்னும் கதாபாத்திரம் மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது. அமரன் படத்திலிருந்து அவர் மீது எழும்பி இருக்கும் ஆக்க்ஷன் இமேஜ் இந்த படத்தின் மூலம் மேலும் அதிகரிக்கக்கூடிய வகையில் அவரது உடல் மொழி நன்கு அவருக்கு கை கொடுத்துள்ளது ,வித்யூத் ஜம்வால், சபீர் கல்லரக்கல் இருவரும் எதிர்மறை கதாபாத்திரங்களில் அட்டகாசமான தங்களது நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்க வைத்துள்ளார்கள் .மேலும் பிஜூ மேனன், விக்ராந்த் போன்றவர்களும் தங்களுடைய கதாபாத்திரங்களுக்கு ஏற்றதொரு நடிப்பை நன்கு கொடுத்திருக்கிறார்கள் .தோற்றத்திலும் நடிப்பிலும் ருக்மணி வசந்த் மாலதி என்னும் கதாபாத்திரத்தில் நன்கு நடித்துள்ளார்.

ஒளிப்பதிவாளர் சுதீப் இளமோனின் ஒளிப்பதிவு படம் முழுவதும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளது.அனிருத் இசையில் பாடல்களும் ,குறிப்பாக பின்னணி இசையும் ஆக்ஷன் காட்சிகளில் உயிரோட்டத்தை கொடுக்கும் முறையில் அமைந்துள்ளது .ஸ்ரீதர் பிரசாத்தின் படத்தொகுப்பு, படத்தின் விறுவிறுப்புக்கு முக்கிய காரணியாக உள்ளது. காதலும் ஆக்க்ஷனும் கலந்த கதை களத்தில், விறுவிறுப்பான திரைக்கதையோடு, வர்த்தக ரீதியான படங்களுக்கு தேவையான அனைத்து அம்சங்களையும் ஒருசேர கலந்து இப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ்.

Spread the love