Wednesday, December 31

தலைவன் தலைவி- திரைவிமர்சனம்

பாண்டியராஜ் இயக்கத்தில் ,விஜய் சேதுபதி, நித்யா மேனன், யோகி பாபு, சரவணன் மற்றும் பலர் நடித்திருக்கும் தலைவன் தலைவி திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

மதுரை ஒத்த கடையில் தனது குடும்பத்துடன் உணவகம் நடத்தி வருகிறார் ஆகாச வீரன் (விஜய் சேதுபதி) அவருக்கும் பேரரசிக்கும் (நித்யா மேனன்) திருமணம் நிச்சயிக்க செய்யப்படுகிறது, இதன்பின் ஆகாச வீரனும் பேரரசியும் காதலிக்க துவங்குகிறார்கள், ஆனால் நான் சில காரணங்களால் இந்த திருமணம் நடைபெற விரும்பாத உறவுகள் அதை நிறுத்த நினைத்தாலும் இரு வீட்டாரின் எதிர்ப்புக் குரலையும் மீறி, பேரரரசியை தன் வீட்டுக்கு அழைத்து வந்து திருமணம் செய்து கொள்கிறார் ஆகாச வீரன். திருமணத்திற்கு பிறகு அவரது அவர்களது இல்லற வாழ்க்கை சுமூகமாக சென்று கொண்டிருந்தாலும் ,மீண்டும் இருவீட்டாரின் சொந்த பந்தங்களினால் தம்பதியரின் உறவுக்குள், சண்டை சச்சரவுகள், விரிசல்கள் ஏற்பட துவங்குகிறது. ஒரு சூழலில் கணவன் மனைவி இருவருமே பிரியக்கூடிய சூழல் ஏற்படுகிறது. இந்த சமயத்தில் அவர்களது குழந்தைக்கு மொட்டை அடிக்கும் சம்பிரதாய நிகழ்வு கோவிலில் நடப்பதை அறிந்த ஆகாச வீரன். தனக்கு தெரியாமல் தன் மகளுக்கு முடிவெடுக்கும் நிகழ்வு நடைபெறுவதா? என்ற கோபத்துடன் நிகழ்ச்சி நடைபெறும் கோவிலுக்கு செல்கிறார் .அதன்பின் கோவிலில் என்ன நடந்தது ?இறுதியில் ஆகாச வீரனும் ,பேரரசியும் இணைந்தார்களா ?இல்லையா ? என்பதே இந்த படத்தின் மீதி கதை.

கதையின் நாயகன் ஆகாச வீரனாக விஜய் சேதுபதி அமர்க்களமாக நடித்திருக்கிறார், இந்த மாதிரி கதாபாத்திரங்கள் அவருக்கென்றே வடிவமைக்கப்பட்ட விதத்தில் இருக்கும் ,அதன்படியே இந்த ஆகாச வீரன் கதாபாத்திரத்தையும் மிகவும் எதார்த்தமாக கையாண்டு சிறப்பான நடிப்பினை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார் .ஆகாச வீரனின் மனைவி பேரரசியாக நித்யா மேனன் நடித்துள்ளார், இவர் இதற்கு முன்பு நடித்த படங்களில் தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருந்தாலும், இந்த படத்தில் இவர் ஏற்றி இருக்கும் கதாபாத்திரம் புதிய பரிமாணத்தில் அவரை மிளிர வைத்துள்ளது. கதாபாத்திரத்தின் பெயர் மட்டும் பேரரசி அல்ல இந்தப் படத்தின் நடிப்பை பொருத்த அளவிலும் அவர் பேரரசியாகவே திகழ்ந்து இருக்கிறார், மேலும் விஜய் சேதுபதி தந்தையாக பருத்திவீரன் சரவணனும் ,நித்யா மேனனின் அப்பாவாக வினோத்தும், விஜய் சேதுபதியின் தாயாக தீபா சங்கரும், தங்கையாக ரோஷினியும்,மற்றும் அவர்களுடன் காளி வெங்கட், யோகி பாபு ,மைனா நந்தினி ,சென்றாயன் என படம் முழுவதும் ஏராளமான நட்சத்திரங்கள் இடம் பெற்றுள்ளார்கள். ஒவ்வொருவரும் அவரவர் கதாபாத்திரங்களில் குறைவில்லாத நடிப்பை வழங்கி படத்தின் கதை ஓட்டத்திற்கு உறுதுணையாக நின்று உள்ளார்கள்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் பங்களிப்பு ,இந்த படத்தின் காட்சிகளுக்கு மிகப்பெரிய வலு சேர்த்து இருக்கிறது ,பாடல்களிலும் சரி, பின்னணி இசையிலும் சரி சந்தோஷ நாராயணனின் தனி முத்திரை பதிந்து உள்ளது , குறிப்பாக பொட்டல மிட்டாயே பாடல் மிகவும் மிகவும் ரசிக்க வைக்கிறது .ஒளிப்பதிவாளர் M. சுகுமாரின் கைவண்ணத்தில், கண்களுக்கு இனிய காட்சிகள், அழகாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

வம்சம், கடைக்குட்டி சிங்கம் ,நம்ம வீட்டு பிள்ளைஎன குடும்ப உறவுகளுக்குள் நிகழும் கதைகளை,வலுவான காட்சிகள் ஆக்கி அதனை படமாக்குவதில் கைதேர்ந்தவர் இயக்குனர் பாண்டிராஜ் .இந்தப் படத்திலும் ,அவர் கணவன் மனைவி இடையே உறவுகளால் அவர்களுக்குள் இடையே ஏற்படும் உரசல்கள், மேலும் தம்பதியிடையே சிறியதாக எழும் சண்டை சச்சரவுகள் ,பெரிய அளவிற்கு எப்படி போய் முடியும் என்பதை உணர்த்தும் விதமாக யதார்த்தமான படத்தை கொடுத்துள்ளார்.

மொத்தத்தில் இந்த தலைவன் தலைவி,ஒரு குடும்ப விருந்து.

Spread the love