Friday, April 17

மாரீசன்- திரைவிமர்சனம்

மிக முக்கியமான விஷயத்தை படத்தின் கதை கருவாக அமைத்து, அதனுடன் புதுவிதமான திரைக்கதையை சேர்த்து விறுவிறுப்பான ,ஆழமான ,அழகான பதிவாக வெளிவந்திருக்கும் படம் மாரீசன்.

ஜெயிலில் இருந்து விடுதலை ஆகுற ஃபஹத் ஃபாசில் மறுபடியும் திருட போலாம்னு முடிவு பண்றாரு ,அதன்படியே ஒரு வீட்டுக்குள்ள போறாரு ,அங்க கை விலங்கு கட்டப்பட்ட நிலையில இருக்கிற வடிவேலுவை பாக்குறாரு, தன்னை விடுவிச்சா 25 ஆயிரம் கொடுக்கிறேன் என்று வடிவேலு சொல்கிறார் அதுக்கு சம்மதிக்கும் ஃபஹத் ஃபாசில், அவருடைய விலங்கை அவிழ்த்து விடுகிறார்,அதன்பிறகு ரெண்டு பேரும் சேர்ந்து திருட்டு பைக்ல போறாங்க. பேசின பணத்த ஃபஹத் ஃபாசிலுக்கு கொடுக்கிறதுக்காக வடிவேலு ஏடிஎம்க்கு போறாரு, ஏடிஎம்ல 25 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்துட்டு வெளியே வரும்போது கண்ணாடி வழியா வடிவேல் உடைய அக்கவுண்ட்ல இன்னும் 25 லட்ச ரூபா பேலன்ஸ் இருக்குன்னு தெரியறதை பாக்குற ஃபஹத் ஃபாசில் , அதுவரைக்கும் பணத்தை வாங்கிட்டு வடிவேலுவினை கழட்டி விடனும்-ன்னு நெனச்சிட்டு இருக்கறவரு  இன்னும் 25 லட்சம் இருக்கின்னு பார்த்த பிறகு,, எப்படியாவது அந்த பணத்தையும் வடிவேலு கிட்ட நைசா பேசி எப்படியாவது வாங்கணும்னு முடிவு பண்றாரு ,இதனால திருவண்ணாமலைக்கு போறேன்னு சொல்ற வடிவேலுவை தானே வண்டியிலேயே கூட்டிட்டு போறேன்னு ஃபஹத் ஃபாசில்  சொல்றாரு ,அதன்படியே போகும்போது தனக்கு அடிக்கடி ஞாபகம் மறதி ஏற்படுற வியாதி இருக்குன்னு வடிவேலு சொல்றாரு, இதை தனக்கு சாதகமா பயன்படுத்திக்க ஃபஹத் ஃபாசில்  நினைக்கிறாரு . திடீர்னு ஒரு செலவு ஏற்பட ஏடிஎம்ல பணம் எடுத்து தரேன் வடிவேலு சொல்ல ,ஆனால் பாஸ்வேர்டை மறந்து போகவே ஒரு தடவைக்கு இரண்டு தடவை ட்ரை பண்றாங்க ஆனா பாஸ்வேர்ட் தப்புன்னு காட்டுது ,மறுபடியும் ட்ரை பண்ணா கார்டு பிளாக் ஆயிடும் அதனால என்ன பண்றதுன்னு தெரியாம வடிவேலுவை கூட்டிகிட்டு டூவீலரில் ஃபஹத் ஃபாசில்  தொடர்ந்து பயணம் பண்றாரு ,வடிவேலுவை பற்றியும் அவர்கிட்ட இருக்கிற பணத்தை பற்றியும் அதை எப்படியாவது ஆட்டைய போடணும்னு தன்னுடைய தன் கூட ஜெயில்ல நட்பான விவேக் பிரசன்னா கிட்ட நடந்த விஷயங்களை ஃபஹத் ஃபாசில்  சொல்றாரு, விவேக் பிரசன்னாவும் டூப்ளிகேட்டு ஏடிஎம் கார்டு ரெடி பண்ணி தரேன்னு சொல்ல ,அதோடு பாஸ்வேர்டையும் எப்படியாவது தெரிஞ்சுக்கணும்னு ரெண்டு பேரும் முடிவு பண்றாங்க ,இப்படியாக ஃபஹத் ஃபாசிலும், வடிவேலுவும் டூவீலர்லையே பயணிக்கிற ஒவ்வொரு இடங்களிலேயும் சுவாரஸ்யமான சில நிகழ்ச்சிகள் நடக்குது, வடிவேலுவின் ஞாபகம் மறதியும், அதை சமாளிச்சுகிட்டு போற ஃபஹத் ஃபாசிலும் செய்யும் பயணமே முதல் பாதி படத்தினை முழுமை அடைய வைச்சிருது ,இந்த சூழ்நிலையில் சில கொலைகளும் நடக்குது, போலீஸ் அதிகாரியா இருக்கிற கோவை சரளாவும் ,அவருடைய டீமும் குற்றவாளி யாரு ?எங்க இருக்கான்னு தேடி கண்டுபிடிக்க முயற்சி பண்றாங்க., பணத்துக்காக ஃபஹத் ஃபாசில் ,வடிவேலு உடன் பயணிக்க, வடிவேல் எதற்காக ஃபஹத் ஃபாசில்  கூட பயணிக்கிறார், அதற்கான காரணம் என்ன ? உண்மையிலேயே வடிவேலுக்கு ஞாபகம் மறதி இருக்கிறதா? இல்லையா? கொலை செய்யப்பட்டவர்கள் யார் ? அவர்களை கொலை செய்ததற்கான காரணம் என்ன ? கொலையாளியை கோவை சரளா டீம் கண்டுபிடிச்சாங்களா ?இல்லையா ?அப்படிங்கறதுதான் படத்துடைய இரண்டாம் பகுதி கதை.

வேலாயுதம் பிள்ளையாக  நடிச்சிருக்கிற வடிவேலு வித்தியாசமாக ,வெகு சிறப்பாக அந்த கதாபாத்திரத்தின் ஆழத்தை தன் நடிப்பின் மூலம் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். ஃபஹத் ஃபாசில்  உடன் பயணிக்கும் போது, யதார்த்தத்தை யாரும் விட்டு விலகக் கூடாது என்ற போட்டியே இருவருக்கும் நடக்குது. அதேபோல சண்டைக் காட்சிகளில் கூட, சினிமாத்தனம் கலந்திடாத , மிகைப்படுத்தபடாத நடிப்பை கவனமாக வெளிப்படுத்தி இருக்கிறார் வடிவேலு.

வழக்கம்போலவே ஒவ்வொரு படத்திலும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி பல பாராட்டுகளை பெற்ற ஃபஹத் ஃபாசில் இந்த படத்திலும் ,தயாளன் என்னும் கதாபாத்திரமாக வாழ்ந்து இருக்கிறார். ஆரம்பத்தில் இன்னசென்டாக வரும் வடிவேலுவை முழுமையாக நம்புவதும், பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை தெரிந்து கோபப்படுவதும் என இப்படி ஒவ்வொரு காட்சிகளிலும் பல பரிமாணங்களை தன் யதார்த்தனமான நடிப்பின் மூலமாக வெளிப்படுத்தி இருக்கும் ஃபஹத் ஃபாசிலுக்கு பாராட்டுக்கள்.

வில்லனாக வரும் விவேக் பிரசன்னா,கோவை சரளா, சித்தாரா லிவிங்ஸ்டன், பி எல் தேனப்பன் என படத்துல குறைவான நட்சத்திரங்களே இருந்தாலும் ஒவ்வொருவரும் கதைக்கும், கதாபாத்திரத்துக்கும் ஏற்ற மாதிரி நடித்து நம்முடைய மனதிலும் இடம் பிடிச்சிருக்காங்க .

ஒரு டிராவலிங் ஸ்டோரிய தன்னோட ஒளி வண்ணத்துனால காட்சிகள் மூலமாக அழகுப்படுத்தி, திரைக்கதைக்கு துணையாக , படம் பார்க்கின்றவர்களை பயணிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கலைச்செல்வன் சிவாஜி. யுவனின் பின்னணி இசை படக்காட்சிகள் நகர்வதற்கு உறுதுணையாக இருந்து படத்திற்கு மேலும் அழகு சேர்த்திருக்கு.

ரெண்டு கதாபாத்திரங்கள் ,அவர்களின் சந்திப்பு, அவர்களுக்கிடையான ஒப்பந்த இணைப்பு ,அதன்பின் அவர்களின் பயணம் ,அதில் இடம் பெரும் சம்பவங்கள் என புதுமையான பாதையில் பயணிக்கும் கதைக்கு ஏற்ற திரைக்கதை காட்சிகளையும், கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான நட்சத்திர தேர்வும் கொண்டு ஒரு யதார்த்த சினிமாவை ,திரைக்கதை எழுத்தாளர் வி.கிருஷ்ணமூர்த்தியின் உறுதுணையோடு சிறப்பாக படமாக்கியுள்ளார் இயக்குனர் சுதீஷ் சங்கர்.

முதல் பாதில வடிவேலும் ஃபஹத் ஃபாசில்  மட்டுமே முழுக்க பயணிப்பது சில இடங்களில் ரசிக்கக் கூடியதாக இருந்தாலும் ,அதில் கொஞ்சம் தொய்வும் ஏற்பட்டிருக்கிறது. ஆனா அந்த தொய்வுக்கும் மாற்றாக , இரண்டாம் பகுதி , விறுவிறுப்பான திரைக்கதையோடும் , எதிர்பாராத திருப்புமுனைகளோடும் நகரும் காட்சிகளால் மாரீசனுக்கு கூடுதல் பலம் சேர்ந்திருக்கு. சூப்பர் குட் பிலிம்ஸ் என்ற மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனத்தின் வெற்றி பட வரிசையில் மாரீசன் படத்துக்கும் நிச்சயம் இடம் உண்டு .

Spread the love