Saturday, April 25

படைத்தலைவன்- திரை விமர்சனம்

தமிழ் சினிமாவுல கதாநாயகனுக்கும் யானைக்கும் உள்ள பாசப்பணிப்பை வலியுறுத்த மாதிரி நிறைய படங்கள் வந்திருக்கு, புரட்சி நடிகர் எம்ஜிஆர் நடித்த நல்ல நேரம்,சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அன்னை ஓர் ஆலயம் ,சூப்பர் ஆக்டர் கமலஹாசன் நடித்த ராம் லட்சுமண் இப்படி பல பழைய படங்கள் தொடங்கி சமீப காலங்களில் விக்ரம் பிரபு நடித்த கும்கி போல நிறைய படங்களை உதாரணங்களாக சொல்லலாம், அதேபோல யானைக்கும் நாயகனுக்கும் உள்ள பாசப்பிணிப்பை சொல்லக்கூடிய கதை தான் படைத்தலைவன்.

கஸ்தூரிராஜா ஒரு யானையை அன்போடு வளர்த்து வருகிறார் ,அந்த யானை அவரது மகன் சண்முக பாண்டியனிடமும் மிகுந்த பாசம் கொண்டுள்ளது.நண்பர்களுடைய ஆலோசனையின் படி தான் வளர்க்கும் யானையை ஒரு கல்யாண நிகழ்ச்சிக்கு அழைத்து செல்கிறார் பாண்டியன் ,ஆனால் அப்பொழுது யானைக்கு ஒரு சிக்கல் ஏற்படுகிறது அந்த சிக்கலில் இருந்து தான் ஆசையாய் வளர்த்த யானையை எப்படி நாயகன் காப்பாற்றுகிறார்? யானைக்கு அந்த ஆபத்து யாரால் வந்தது ? இதிலிருந்து நாயகனும் அவர் ஆசையை வளர்த்த யானையும் எப்படி மீண்டார்கள் ? என்பதே படத்தின் மீதி கதை.

கதையின் நாயகனாக சண்முக பாண்டியன் இந்த படத்தில் நடித்திருக்கிறார் அவரது முந்தைய படங்களை காட்டிலும் இந்த படத்தில் அவரது நடிப்பில் நல்ல முன்னேற்றம் உள்ளது , ஆக்ஷன் காட்சிகளில் கவனத்தை ஈர்க்க அவரது உடல் தோற்றமும், உடல் மொழியும் நன்றாகவே கைகொடுத்துள்ளது.ஆக்சன் காட்சிகளில் தன்னுடைய திறமையை நன்கு வெளிப்படுத்தி உள்ளவர் செண்டிமெண்ட் காட்சிகளிலும் தன்னுடைய திறமையை திறம்பட வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க வேண்டும்,இனிவரும் படங்களில் அதை அவர் நிறைவேற்றிடுவார் என்று நம்பலாம்.

சண்முக பாண்டியனின் தந்தையாக கஸ்தூரிராஜா நடித்துள்ளார் ,மகன் மீது பாசம் கொண்ட தந்தையாக தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் யதார்த்தமாக நடித்துள்ளார், படத்தின் நாயகியாக யாமினி சந்தர் நடித்துள்ளார், பழங்குடி இன பெண்ணாக நடித்துள்ள அவருக்கு குறிப்பிட்டு சொல்லக்கூடிய அளவுக்கு எந்த விதமான காட்சிகளும் பெரிதாக இல்லை.மற்றும் வில்லனாக கருடன் ராம், மேலும் ரிஷி ,முனீஸ்காந்த் ,,யூகி சேது ,லோகு, ஏ .வெங்கடேஷ் போன்றவர்களும் அவரவர் கதாபாத்திரங்களில் குறை காண இயலாத.நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்.

படைத்தலைவன் படத்துக்கு ஒளிப்பதிவு செய்து இருப்பவர் எஸ் ஆர் சதீஷ் குமார் ஆக்சன் காட்சிகளை பதிவு செய்வதில் இவரது கோணங்களும், ஒளியமைப்பும் சிறப்பாக உள்ளது.பட த்திற்கு இசை, இசைஞானி இளையராஜா அவரது இசையில் பாடல்கள் கேட்கும் படியாகவும், பின்னணி இசை கதையோடு பயணிக்கும் படி இருந்தாலும், அது அவரது ரசிகர்களை ஓரளவுக்கே கவரும் வகையில் உள்ளது என்று சொல்லலாம்.

மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களை AI தொழில்நுட்ப உதவியுடன் வரும்படி ஒரு காட்சி அமைத்துள்ளார்கள் ,இது கேப்டன் ரசிகர்களுக்கு உற்சாகத்தை தரும் வகையில் உள்ளது ,அதேபோல கேப்டனின் பொட்டு வச்ச தங்க குடம் பாடல் சண்டைக் காட்சியில் பயன்படுத்தப்பட்டு இருப்பதை விட வேறு ஏதாவது ஒரு காட்சியில் கதையோடு இணைந்து பயன்படுத்தப்பட்டிருந்தால் மிகவும் ரசிக்கும்படி இருந்திருக்கும்.

ஏற்கனவே தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான காடுகள், யானைகள், நாயகன் சம்பந்தப்பட்ட கதையை மீண்டும் புதிய நடிகர்களை கொண்டு படமாக்கி உள்ளார் இயக்குனர் அன்பு. .திரைக்கதையிலும், கதாபாத்திரங்களை வடிவமைத்திருப்பதிலும் புதுமைகளை சேர்த்திருந்தால் இந்தப் படம் ஏற்கனவே வந்த கதை களத்தில் இருந்தாலும், புதுமையான திரை வடிவம் பெற்று இருந்திருக்கும்.

Spread the love