Thursday, April 23

பீட்சா -3 -விமர்சனம்

நளன் (அஸ்வின்) உணவகம் ஒன்றைத் துவங்கி நடத்தி வருகிறார் ஒரு சமயம் அந்த உணவகத்துக்கு வந்த வாடிக்கையாளர்களில் ஒருவர் மர்மமான மம்மி பொம்மை ஒன்றின் சிலையை உணவகத்திலேயே விட்டு விட்டுச் சென்றுவிடுகிறார்.அதற்கு பின்பு அங்கு பல விசித்திரமான நிகழ்வுகள் நடக்கின்றன, இந்த சூழ்நிலையில் கயல்  (பவித்ரா).ஆவிகளுடன் தொடர்புகொண்டு அவற்றுடன் பேசும் ஒரு செயலியை உருவாக்க தீர்மானிக்கிறார்,  கயலின் சகோதரரான பிரேம் (கௌரவ்), ஒரு காவல்துறை அதிகாரியாக உள்ளார், நளன், கயலின் காதலுக்கு அவர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்,இந்நிலையில் நளனின் உணவகத்தில் விசித்திரமான விஷயங்கள் தொடர்ந்து நடந்த வண்ணமுள்ளன, அந்த உணவகத்தில் உள்ள குளிர்சாதனப்பெட்டியில் தெய்வீகச் சுவையுடன் கூடிய புதிய வித இனிப்பு வினோதமாக தோன்றிக்கொண்டே உள்ளது, இது குறித்து நளன் ஆச்சரியப்பட்டு, உணவக உணவு தயாரிப்பு அறைக்குள் வீடியோ கேமரா மூலம் பார்க்கையில்,பழிவாங்கும் நோக்கில் தீய ஆவிகள் அங்கு சுற்றித் திரிவதை பார்க்கிறார்,இங்கு ஏன் இப்படி நடக்கிறது ? இதற்க்கு பின்புலம் என்ன?என்பதே ‘பீட்ஸா 3 – தி மம்மி’ படத்தின் மீதி கதை.

கதையின் நாயகனாய் நடித்துள்ள அஸ்வினை பொறுத்தவரை கொடுக்கப்பட்ட பாத்திரத்துக்கு உரிய வகையில் காட்சிகளின் தன்மைக்கு ஏற்ப நன்கு நடித்துள்ளார்.அதேபோல கயல் என்னும் பாத்திரத்தில் பவித்ரா மாரிமுத்துவும் குறைவின்றி நடித்துள்ளார்.

உணவகத்தின் சமையல்காரர்களில் ஒருவரான தாமுவாக காளி வெங்கட், ராணியாக அனுபமா குமார் மற்றும் மித்ராவாக அபி நக்ஷத்ரா, மேலும்  கௌரவ், மற்றும் விஸ்வநாதன் கேரக்டரில் நடித்த கவிதா பாரதி ஆகியோரும் தங்களுடைய பாத்திரங்களில் மாறுபட்ட நடிப்பை தந்துள்ளார்கள் .

இதுபோன்ற ஹாரர், திகில் படங்க்ளுக்கு மைய நாடிகளான ஒளிப்பதிவை ,ஒளிப்பதிவாளர் பிரபு ராகவும் படத்தொகுப்பை ,படத்தொகுப்பாளர் இக்னேசியஸ் அஸ்வினும், பின்னணி இசையை அருண் ராஜூம் நன்கு வழங்கி, இயக்குனர் மோகன் கோவிந்துக்கு பலம் சேர்த்துள்ளார்கள்.

பார்த்து பழகிப்போன கதையாக இருந்தாலும் திரைக்கதையில் எதிர்பாராத திருப்பங்களையும், தொழில் நுட்பத்தில் புதிய யுக்திகளையும் சேர்த்து இருந்தால், இந்த பீட்ஸாவின் ருசி இன்னமும் ரசிகர்களை ஈர்த்து அவர்களது விருப்ப மெனுவில் இடம் பெற்று இருக்கும் .

Spread the love