பிரபல பாடகியும் மாடலுமான லைலா (மீனாட்சி சவுத்ரி), மர்மமான சூழ்நிலையில் கொலை செய்யப்படுகிறார்.இந்த கொலை வழக்கை விசாரணை செய்ய ஐபிஎஸ் அதிகாரியான சந்தியா மோகன்ராஜ் (ரித்திகா சிங்) நியமிக்கப்படுகிறார், அவர் கொலையாளியைப் பிடிக்க காவல் துறையில் இருந்து ஒதுங்கி இருக்கும் முன்னாள் புலனாய்வு அதிகாரியுமான விநாயக்கின் (விஜய் ஆண்டனி) உதவியை நாடுகிறார் . ஏற்கனவே தனிப்பட்ட நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் விநாயக், சற்று தயக்கத்துடன் வழக்கை கையில் எடுக்கிறார்.சந்தியா மற்றும் விநாயக் இருவரும், லைலாவின் வாழ்க்கையில், அவளோடு பயணித்த அவளது காதலன், மாடலிங் ஏஜென்ட் மற்றும் புகைப்படக் கலைஞர் உட்பட சிலரை விசாரிக்கத் தொடங்குகிறார்கள். இவர்களுக்கும் லைலாவின் கொலைக்கும் தொடர்பு உண்டா ? அல்லது இவர்கள் நீங்கலாக வேறு யாருக்கேனும் இந்த கொலையில் தொடர்பு உள்ளதா? மேலும் விஜய் ஆண்டனி மற்றும் ரித்திகா சிங்கின் டீம் எப்படி கொலையாளியை கண்பிடித்தது? போன்ற விடை தெரியா வினாக்களுக்கு விடையை சொல்லும் விதமாக படத்தின் மீதி கதை உள்ளது

விநாயக் என்னும் கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி தனக்கே உரித்த இயல்பான நடிப்பை ,அதிகாரி மற்றும் தந்தை என்ற இரு பரிமாணங்களில் நன்கு வெளிப்படுத்தியுள்ளார்.

ஐபிஎஸ் அதிகாரி சந்தியா மோகன்ராஜாக வரும் ரித்திகா சிங் தான் ஏற்றுள்ள கதாபாத்திரத்துக்கு ஏற்ற வகையில் சிறப்பாக நடித்துள்ளார் , லைலாவாக நடித்துள்ள மீனாட்சி சவுத்ரி மாடல் அழகி கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வு, அவரும் நிறைவாக நடித்துள்ளார் மற்றும் ராதிகாசரத்குமார் ,ஜான்விஜய் அர்ஜூன் சிதம்பரம், முரளி ஷர்மா, சித்தார்த் ஷங்கர் போன்றோரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்துக்கு தேவையான நடிப்பை கொடுத்துள்ளார்கள் .
10 ஆண்டுகளுக்கு விடியும் முன் என்னும் க்ரைம் திரில்லர் கதையை கொடுத்த இயக்குனர் பாலாஜி குமார் அதற்க்கு பிறகு இயக்கியுள்ள படம் இந்த கொலை, அவருக்கு கிரீஷ் கோபால கிருஷ்ணனின் பின்னணி இசையும், சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவும் R .K .செல்வாவின் படத்தொகுப்பும் பக்க பலமாக உதவி இருக்கிறது.

சிறப்பான தொழில்நுட்பங்களுடன் ,நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ள இந்த கொலை ,ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்ளும்.
