மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் ,சரிதா ,மிஷ்கின்,யோகிபாபு மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘மாவீரன்’ .
.
இந்த கதையின் நாயகன் சத்யா (சிவகார்த்திகேயன்)அவர் ஒரு காமிக்ஸ் ஓவியர் ,சத்யா சென்னையில் தனது அம்மா (சரிதா) மற்றும் தங்கையுடன் (மோனிஷா) வாழ்ந்துவருகிறார்,சத்யா (சிவகார்த்திகேயன்).
ஒரு சமயம் அவர்கள் வசித்து வரும் பகுதியில் இருந்து அப்பகுதி மக்கள் வெளியேறும்படி அறிவிப்பு தரப்படுகிறது, மேலும் அவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு மாற்று இடமும் அரசால் கொடுக்கப்படுகிறது ,ஆனால் அந்த குடியிருப்புகள் வாழத் தகுதியற்ற ,மோசமான நிலையில் காணப்படுகின்றன ,பயந்த சுபாவம் கொண்ட சத்யா வாழ்வியல் சூழல் பிரச்சனை நெருக்கடியால் தற்கொலைக்கு முயல்கிறார். அப்பொழுது அவருடைய கார்டூன் கதையின் ஹீரோவான ஒரு வீரனின் குரல் அசரீரீயாய் கேட்கிறது. தான் சொல்வதை கேட்டு நடக்கும் பயந்த குணம் கொண்டசத்யாவை, அந்தக் குரல் எப்படி ஒரு ‘மாவீரன்’ஆக பரிமளிக்க வைக்கிறது என்பதே மீதி படத்தின் கதை ஆகும்.

கதையின் நாயகனாய் சத்யா என்னும் கதாபாத்திரத்தில் , தன் வழக்கமான பாணியிலிருந்து சற்று மாறுபட்ட பாணியில் புதிய பரிமாண நடிப்பை இப்படத்தில் சிவகார்த்திகேயன் வெளிப்படித்தியுள்ளார் ,நாயகனுக்கு இணையாக எதிர் வினை ஆற்றும் வில்லன் இருந்தால்தான் கதையின் வேகத்துக்கும் ,விறுவிறுப்புக்கும் வலிமை இருக்கும் ,அந்த வகையில் அமைச்சராக ஜெயக்கொடி என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள மிஷ்கினின் கதாபாத்திரம் குறிப்பிட்டு சொல்லும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது .நகைச்சுவையில் யோகிபாபுவின் பங்களிப்பு பாராட்டும்படி உள்ளது ,நாயகியாக அதிதி ஷங்கர்நடித்துள்ளார் .நம் பெரும்பான்மையான படங்களின் நாயகியை போன்ற கதாபாத்திரத்திரத்தை ஏற்று குறைவின்றி நடித்துள்ளார், மேலும் சிறிது கால இடைவெளிக்கு பிறகு சரிதா, பாதிக்கப்பட்ட பகுதி மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்திக்காட்டும் ஈஸ்வரி என்னும் கதாபாத்திரத்தில் நன்கு நடித்துள்ளார், தங்கையாக மோனிஷா, பரமு என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சுனில் போன்றோரும் தங்களுக்கு வழங்கப்பட்ட பாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ப நன்கு நடித்துள்ளார்கள்.

ஏற்கனவே மண்டேலா படத்தை இயக்கியதன் வாயிலாக ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ள இயக்குநர் மடோன் அஸ்வின்,இந்த படத்தில் சிவாவுடன் கரம் சேர்த்து , நல்ல கதைக்கேற்ற சிறந்த திரைக்கதையில், மக்களின் வாழ்வியல் இன்னல்களையும்,அதோடு பொழுது போக்கு அம்சங்களயும் கலந்து கொடுத்து மீண்டும் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார். விஜய் சேதுபதியின் வாய்ஸ் படத்தின் கதையோட்டத்துக்கு மேலும் வலு சேர்க்கிறது

கதையின் காட்சிகளுக்கு ஏற்ற வண்ணமாய் விது அய்யனாவின் ஒளிப்பதிவு நன்கு அமைந்துள்ளது, பரத் ஷங்கரின் இசையில் பாடல்களும் கவரும் வகையில் உள்ளன.

மாவீரன் ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமானவன் .
