பல நூற்றாண்டுகளுக்கு முன்பு காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப்படுவதையும், மக்கள் இன்னல்படுவதையும் கண்ட மாமன்னன் கரிகால சோழன் அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அணையைக் கட்ட முடிவெடுத்து 1-ஆம் நூற்றாண்டில் அந்த ஆற்றின் மீது கட்டிய கல்லணையே இந்தியாவின், தமிழ்நாட்டில் உள்ள உலக பழமை வாய்ந்த அணையாகும். இந்த வரலாற்று சிறப்புமிக்க கல்லணை திருச்சிக்கு மிக அருகிலும் தஞ்சாவூர் மாவட்டத்திலும் உள்ளது.
கல்லணை, தற்போதுள்ள அணைகளில் மிக பழமையானது மற்றும் , தற்போதும் பயன்பாட்டில் உள்ள அணை என்ற தனி சிறப்புகளை கொண்டுள்ளது இந்தஅணையின் நீளம் 1080 அடி அகலம் 66 அடி மற்றும் உயரம் 18 அடியாகும். 1839 இல் அணையின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டது. பல இடங்களிலிருந்து தினந்தோறும் ஏராளமான மக்கள் இவ்வணையைக் காண வருவதால், இது ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.
பாசன காலங்களில் காவிரி, வெண்ணாறு, புது ஆறு ஆகியவற்றிலும், வெள்ளக் காலங்களில் கொள்ளிடத்திலும் தண்ணீர் கல்லணையில் இருந்து திறந்துவிடப்படும்.
இந்திய நீர் பாசனத்தின் தந்தை என அறியப்படும் சர் ஆர்தர் காட்டன் என்ற ஆங்கில பொறியாளர் கல்லணையை பற்றி ஆராய்ச்சிகள் செய்து அதன் சிறப்பு அம்சங்களை வெளிப்படுத்தியதோடு கிரான்ட் அணைகட் என்ற பெயரையும் அதற்கு சூட்டினார்
பல நூற்றாண்டுகளை கடந்தும் இன்றும் உறுதியோடு நிற்கும் கல்லணை நம் முன்னோடி தமிழர்களின் கட்டுமான திறனையும் நீர்ப்பாசன மேலாண்மையினையும் உலகிற்க்கு வெளிப்படுத்தி கொண்டுள்ளது இந்த மாபெரும் வரலாற்று சிறப்பு மிக்க அணையை தந்த மாமன்னன் கரிகால சோழனை கெளரவிக்கும் வண்ணம் அவருக்கு காவிரி ஆற்றின் கரை ஓரத்தில் மணி மண்டபம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு யானை மீது கரிகால சோழன் அமர்ந்த நிலையில் வீற்றிருக்கும் சிலையும் அமைக்கப்பட்டு உள்ளது மேலும் அங்குள்ள பாதைகளில் காவேரி ஆற்றின் புராண கதை சொல்லும் அகத்தியர் சிலை மற்றும் உழவர் சிறப்பை போற்றும் சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன
கல்லணையின் சிறப்பையும் வரலாற்றையும் வெளிக்காட்டும் பல பழங்கால பாடல்களும் கல்வெட்டுகளும் இன்றைக்கும் சான்றாக உள்ளன, திருச்சியிலுள்ள மலைக்கோட்டை சமயபுரம்,திருவரங்கம் ,திருவானைக்காவல் ,குமராவயலூர்,உறையூர் வெக்காளிஅம்மன் போன்ற கோவில்கள் மற்றும் முக்கொம்பு போன்ற சுற்றுலாதலங்களை பார்த்துவிட்டு தஞ்சை பகுதிக்கு செல்வோர் அதன் இடையே உள்ள கல்லணையினையும் தவறாமல் கண்டு களித்து இன்புறலாம்