சிறுவன் யோகேஸ்வரன் பாடி நடித்து உருவாகியுள்ள ‘ஹே சகோ ‘ இசை ஆல்பம் வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.
இயக்குநர்கள் பேரரசு, ராஜுமுருகன் , தயாரிப்பாளர் கே .ராஜன், பின்னணிப் பாடகர் உன்னி கிருஷ்ணன் ஆகியோர் ஆல்பத்தை வெளியிட படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.இந்த ஆல்பத்தை ரகுராமன், சங்கீதா தயாரித்துள்ளார்கள்.பாடல் எழுதி இசை அமைத்து இயக்கியுள்ளார் ஜெய் க்ருஷ் கதிர்.
இவ்விழாவில் இயக்குநர் ராஜுமுருகன் பேசும்போது
“இந்தப் பாடலைப் பார்த்த போது ஒரு நேர்நிலையான அதிர்வலைகள் பரவுவதை உணர முடிகிறது.
கலை வடிவத்தின் நோக்கம் என்று கூறினால் அந்த வடிவம் ஏதாவது ஒரு வகையில் அன்பையும் மனிதநேயத்தையும் நம்பிக்கையையும் ஓர் அங்குல அளவிலாவது ஏற்படுத்தி உயர்த்த வேண்டும். அந்த வகையில் இந்தப் பாடல் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்தில் உருவாகியுள்ளது.சிறுவன் யோகேஸ்வரன் நன்றாக செய்துள்ளான். நான் இங்கே வந்திருப்பது இதற்கு இசையமைத்துள்ள ஜெய் கிருஷ் என்கிற நண்பனுக்காகத்தான். எனது நண்பர் ஒரு சிறிய பட்ஜெட் படம் எடுத்துவிட்டு அவருக்கும் இசையமைப்பாளருக்கும் இடையில் நிகழ்ந்த மனஸ்தாபத்தால் சில காட்சிகளுக்குப் பின்னணி இசை முடிக்க முடியாமல் நின்று இருந்தது. படத்தை அவசரமாக முடிக்க வேண்டிய நிலை. அப்படிப்பட்ட,இக்கட்டான நேரத்தில் ஜெய்கிருஷ் வந்து ஊதியம் பற்றிப் பேசாமல் எதுவுமே வாங்காமல் தனக்கு எந்தப் பெயரும் கிடைக்காது என்று தெரிந்தும் பின்னணி இசை அமைத்துக் கொடுத்து உதவினார்.
அவர் திறமைக்கான உயரங்கள் காத்திருக்கின்றன. இன்னும் பெரிய மேடைகள் அவருக்கு அமையும்.
சிறுவன் யோகேஸ்வரன் மேலும் வளர்வான்.வாழ்த்துக்கள் ” என்று வாழ்த்தினார்.
விழாவில் பிரபல பின்னணிப் பாடகர் உன்னிகிருஷ்ணன் பேசும்போது,
“நான் இந்த யோகேஸ்வரனை மட்டுமல்ல அவனுக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த அவனது பெற்றோரையும் பாராட்டுகிறேன்; வாழ்த்துகிறேன்.
நல்லதொரு இசை முயற்சியாக இதைச் செய்திருக்கிறார்கள். இதைப் பார்க்கும்போது இசையில் எடுத்துக்கொண்ட கான்செப்ட் புரிகிறது. சிலநிமிடங்களில் ஒலிக்கும் இதற்காக பல மணி நேரம் அவர்கள் உழைத்திருப்பது தெரிகிறது.இந்தப் பாடலை பார்க்கும்போது நல்ல நம்பிக்கையை அளிக்கிறது. வாழ்க்கை விசித்திரமானது. பல ஏற்றங்களையும் தாழ்வுகளையும் கொடுக்கக்கூடியது. நமது தாழ்வான நேரங்களில் யாராவது நம்பிக்கை வார்த்தைகள் சொல்வதற்கு என்று வேண்டும். அப்படி ஒரு நம்பிக்கை தரும் பாடலாக இதை நான் பார்க்கிறேன்.
வளரும் திறமைசாலிகளுக்கு நல்ல வாழ்த்தும் ஆசிர்வாதமும் தேவை .நாங்கள் அதைக் கொடுப்பதற்காகத் தான் இங்கே வந்திருக்கிறோம். இதேபோல் பல பாடல்கள் உருவாக வேண்டும்.பிள்ளைகளை எப்படி உருவாக்க வேண்டும் என்பதில் பெற்றோரின் பங்கு முக்கியம். என்னை அப்படித்தான் என் பெற்றோர்கள் வளர்த்தார்கள் ஊக்கம் தந்தார்கள். நான் கிரிக்கெட் வெறியன் அதேநேரத்தில் இசையையும் எடுத்துக்கொண்டேன்.அதற்கு ஊக்கம் தந்தது என் பெற்றோர்கள் தான்.
அப்படி யோகேஸ்வரனுக்கு பெற்றவர்கள் அமைந்திருப்பது மகிழ்ச்சி. அவர்களை நான் பாராட்டுகிறேன். வாழ்த்துக்கள்” என்றார்.
நடிகர் அப்புக்குட்டி பேசும்போது,
” இங்கே குடும்பம் குடும்பமாக வந்து இருப்பவர்களைப் பார்த்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது .சினிமாவில் இறங்கும் போது முதலில் குடும்பத்தில் தான் எதிர்ப்பு இருக்கும் .ஆனால் இவர்கள் குடும்பமே சினிமாவுக்கு ஆதரவு தந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது
இதற்கு இசையமைத்திருக்கும் ஜெய்கிருஷ் நான் நடித்த வாழ்க விவசாயி படத்திற்கும் இசையமைத்திருக்கிறார்.பாடல்கள் எல்லாம் பெரிய வெற்றி பெற்றன. அவர் நல்ல திறமைசாலி .இதில் டைரக்ஷனும் செய்து இருக்கிறார். ஒரு வேலையை மட்டும் பாருங்கள். அப்போதுதான் அது நன்றாக இருக்கும் என்பதை அவருக்குச் சொல்லிக் கொள்கிறேன்.
ராஜன் சார் சினிமா வளர்ச்சிக்குப் பலவற்றைப் பேசி வருகிறார்.தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால்தான் சினிமா வளரும் .அதற்கு நடிகர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்” என்றார்.
இயக்குநர் பேரரசு பேசும்போது,
“பாடலைப் பார்த்தோம் மிக நன்றாக உள்ளது.இங்கே ராஜன் சார் வந்துள்ளார். அவர் தயாரிப்பாளர்களுக்காகத் தைரியமாக குரல் கொடுப்பவர் இப்படித் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் . மனதில் பட்டதை எப்போதும் தைரியமாகச் சொல்லி வருகிறார் .உங்கள் அருமை இப்போது தெரியாது. தொடர்ந்து குரல் கொடுங்கள் .
இங்கே யோகேஸ்வரனின் திறமையைப் பார்த்தோம். திறமை இருந்தாலும் பெற்றோர்கள் ஊக்கமாக முன்னெடுத்துச் செல்கிறார்கள். அனைவருக்கும் பெற்றோர்கள் ஓரளவுதான் முன்னே கொண்டுவர முடியும். அதற்குப் பிறகு தன்னுடைய சொந்தத் திறமையால் உழைப்பால்தான் அவர்கள் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும் பிரகாசிக்க முடியும். அப்படி இரண்டு தளபதிகளைச் சொல்லலாம் இளைய தளபதி விஜய் தளபதியாக இருந்து பல வெற்றிகளைக் குவித்தவர். அவருக்கு அவரது தந்தை ஆரம்பத்தில் தூண்டுகோலாக இருந்தார். அதுபோல்தான் தளபதியாக இருந்து தலைவராக மாறி இப்போது முதல்வராக இருக்கும் அவருக்கும் தந்தை ஒரு தூண்டுகோலாக இருந்தார். ஆனால் அதற்குப் பிறகு அவரது உழைப்பாலும் திறமையாலும் வளர்ந்திருக்கிறார். அவர்களின் தந்தை ஆரம்பத்தில் ஒருதொடக்கத்தை மட்டும்தான் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்கள்.
இங்கே அப்புகுட்டி வந்திருக்கிறார்.அவர் ஆரம்பத்தில் என்னிடம் வாய்ப்பு கேட்டு வந்தவர் தான். திருப்பாச்சி படத்தில் கூட்டத்தோடு கூட்டமாக நின்று தோன்றினார்.ஆனால் திருத்தணி படத்தில் முக்கியமான வேடமேற்று நடித்தார். அதற்குப் பிறகு அழைத்த போது இது மாதிரி நண்பனாக வரும் கேரக்டரில் நான் நடிக்க மாட்டேன், நான் கதா நாயகன் ஆகி விட்டேன் என்றார். அவரும் சுசீந்திரன் படத்தில் கதாநாயகனாக நடித்துவிட்டார். இதை அறிந்த போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது .அவரும் தன்னம்பிக்கை நிறைந்த மனிதர்தான்.
இந்த ஆல்பத்தை நல்ல முறையில் உருவாக்கி உள்ளார்கள். இதைப் பார்த்துவிட்டுச் சாதாரணமாகக் கடந்து போக முடியாது. அந்தளவிற்கு நன்றாக உள்ளது .நம்பிக்கையூட்டும் வகையில் இருக்கிறது.படக்குழுவினருக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்” என்றார்.
தயாரிப்பாளர் கே ராஜன் பேசும்போது,
“நான் இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு வந்து இருப்பது இவர்களை வாழ்த்துவதற்கும் பாராட்டுவதற்கும் தான். யோகேஸ்வரனை வாழ்த்த வந்திருக்கும் அனைவருக்கும் நான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால ஒருவரை வாழ்த்தும் போதும் தான் மனம் தூய்மை பெறுகிறது. திட்டுகிற போது நம் மனம் சிறுமை பெறுகிறது. திட்டினாலே ,திட்டுவதற்கு நினைத்தாலே இயற்கையாகவே மனம் சுருங்கி விடும். யோகேஸ்வரனை தம்பி நீ பாடியதும் ஆடியதும் அருமை பிரமாதம் என்று பாராட்டிப் பாருங்கள்.அது வாழ்த்துகிற நம்மையும் வாழ வைக்கும். அந்த நல்லெண்ண அலை இந்தக் குழந்தைக்கும் போய்ச் சேரும்.
இது எல்லாவற்றுக்கும் காரணம் அன்னையும் பிதாவும் தான். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.ஆலயம் தொழுவது அவரவர் இஷ்டம் என்பேன்.
அம்மாக்கள் எந்த தெய்வத்தைக் கும்பிடுகிறார்களோ அதை நீ கும்பிட்டுக் கொள்.ஈஸ்வரனா? முருகனா? விநாயகரா ? ஏசுவா? அல்லவா? அவரவர் அம்மா அப்பா கும்பிடுவதை கும்பிட்டுக்கொள்ளுங்கள்.
இங்கே யோகேஸ்வரனின் பெற்றோரை,குறிப்பாகத் தாயைப் பாராட்ட வேண்டும் . இந்தச் சிறு வயதிலேயே இசையையும் நடனத்தையும் ஊட்டி வளர்த்துள்ளார்கள்.
யோகேஸ்வரன் பாடியதையும் ஆடியதையும் பார்த்தபோது அற்புதம் என்று சொல்லத் தோன்றியது .இறைவனின் அருள் பெற்று வந்த குழந்தை அவன்.
இந்த யோகேஸ்வரன் ஆர்வத்தைப் பார்த்துவிட்டு அவன் மேடையில் தோன்றியதையும் பார்த்துவிட்டு மகிழ்ச்சி அடைந்தேன். அதற்குப் பின்னே உள்ளவ பெற்றோரை நினைத்துப் பெருமைப் பட்டேன். அவர்களை வாழ்த்துகிறேன்.
அவன் மேலும் வளர்ந்து தமிழ்க்கலையை உலகம் எல்லாம் பரப்ப வேண்டும்.
நம்முடைய பிரபுதேவா, நாகேஷின் மகன் ஆனந்தபாபு இருவரும் அவர்கள் உடலை வளைத்து நெளித்து ஆடிய போது மகிழ்ச்சியாக இருந்தது. இங்கே இரண்டு தம்பிகள் நடனம் ஆடினார்கள். உடலை வளைத்து நெளித்து மட்டும் ஆடவில்லை எலும்பை உடைத்து நொறுக்கி ஆடுகிறார்கள் என்று நினைத்தேன் . நான் பயந்து போய் விட்டேன். அற்புதமாக ஆடினார்கள்.அழகு அற்புதம்.
இங்கே இயக்குநர் பேரரசு வந்திருக்கிறார். நானும் அவரும் தான் சிறிய படங்களின் விழாக்களில் அடிக்கடி வந்து வாழ்த்தி விட்டுச் செல்கிறோம் .அவர் பெரிய படங்கள் எடுத்தாலும் பெரிய நடிகர்களை வைத்து பெரிய வெற்றிப்படங்கள் கொடுத்தாலும் சிறிய படங்களுக்கு வந்து வாழ்த்தி ஆதரவு தருகிறார்.
பெரிய தயாரிப்பாளர், பெரிய நடிகர்கள் படத்தை வாழ்த்துவதற்கு யார் வேண்டுமானாலும் வருவார்கள். ஆனால் சிறிய படங்களை வாழ்த்துவதற்கு பெரும்பாலும் யாரும் வருவதில்லை. நாங்கள் தான் வருவோம்.
சிறிய தயாரிப்பாளர்களை வரவேற்பதற்கும் வாழ்த்துவதற்கும் நாங்கள் தான் வரவேண்டும்.
சிறிய தயாரிப்பாளர்கள் வாழ்ந்தால் அவர்கள் எடுத்த படம் வெற்றி பெற்றால் சினிமா வாழும்.
பெரிய நடிகர்கள் பெரிய இயக்குநர்களால் சினிமாவிற்கு ஒரு பயனும் கிடையாது.100 கோடி 200 கோடி வாங்கும் நடிகர்கள் சினிமாவை வாழ முடியாது.அவர்களால் சினிமாவே வளர்க்கவே முடியாது.
சினிமா வாழ்வது சிறிய படத் தயாரிப்பாளர்களால்தான்.ஒரு சிறிய தயாரிப்பாளர் வெற்றி பெற்றால் நூறு தயாரிப்பாளர்கள் திரையுலகில் உள்ளே வருவார்கள். ஆயிரம் குடும்பங்கள் திரையுலகில் வாழும்.
அதனால்தான் நாங்கள் சிறிய தயாரிப்பாளர்கள் வரவேண்டும் வளர வேண்டும் என்று நினைக்கிறோம். இப்போதெல்லாம் நம் ஹீரோக்கள் தெலுங்கு திரையுலகை வாழவைக்கப் புறப்பட்டு விட்டார்கள். இங்கே உள்ள தயாரிப்பாளர்கள் எல்லாரும் பெரிதாக வளர்ந்து விட்டது போல் இவர்கள் தெலுங்குப் பக்கம் போகிறார்கள். இன்னும் சிலர் சாப்பாட்டுக்கே வழியில்லாத ஸ்ரீதேவியின் கணவர் குடும்பத்திற்குப் படங்கள் கொடுக்கிறார்கள் .ஆனால் நானும் பேரரசுவும் சின்ன படங்களையும் சின்ன தயாரிப்பாளர்களையும் வாழ்த்துகிறோம்.அதனால் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.
சின்ன தயாரிப்பாளர் முதலில் நன்றாக இருந்தால் இன்னொரு படம் தான் எடுப்பான்.ஒரு தயாரிப்பாளர் வெற்றி பெற்று நன்றாக இருந்தால் தொழிலாளிகள் நன்றாக இருப்பார்கள்; இயக்குநர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் நன்றாக இருப்பார்கள்; நடிகர்கள் மிக மிக நன்றாக இருப்பார்கள்.
அதிக சம்பளம் எதுவும் கிடையாது.
ஒரு யுகத்தை காப்பாற்றும் அளவுக்கு இன்று ஹீரோக்கள் சம்பளம் வாங்குகிறார்கள்.அந்தப் பணத்தை வைத்துக்கொண்டு யாரைக் காப்பாற்றப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
இந்த பாடல் எழுச்சிமிக்க பாடல்.இசையமைப்பாளர் ஜெய் கிருஷ் கதிருக்கு வாழ்த்துக்கள்.
தன்னம்பிக்கையைத் தரும் வகையில் இந்தப் பாடலை உருவாக்கி இருக்கிறார்கள்.பெண்களின் வாழ்க்கைப் போராட்டம் இதில் சொல்லப்பட்டுள்ளது.இப்போது ஆண்களை விட பெண்கள் பெரியதாக வெற்றி பெற்று வருகிறார்கள். சம்பாதித்து பெற்றோர்களைக் காப்பாற்றுகிறார்கள். ஆண்களை விட பெண்கள் தான் குடும்பத்தையும் காப்பாற்றுகிறார்கள்; நாட்டையும் காப்பாற்றுகிறார்கள். வெற்றி மேல் வெற்றி பெற்று பெற்றோர்களுக்குப் பெயர் வாங்கித் தருகிறார்கள்.
பல ஆண்கள் படிக்கச் சொன்னால் குடிக்கப் போகிறார்கள். குடிப்பதற்குச் சினிமா கதாநாயகர்கள் வழிகாட்டுகிறார்கள்.அவன் குடிக்கப் போகிறான்.
படிப்பில் தோல்வி கண்டால் பாருக்குப் போகிறான்.
இந்தப் பாடலில் ஒரு நல்ல கருத்தைச் சொல்லி இருக்கிறார்கள். அதற்காக படத்தை, இயக்குநர் இயக்கியிருக்கும் விதம் பாராட்டுக்குரியது. ஓர் இயக்குநர் மனது வைத்தால்தான் ஒரு படம் நல்ல படமாக மாறும். படத்தின் வெற்றிக்கும் தோல்விக்கும் இயக்குநர்கள் தான் காரணம்.இந்தப் பிள்ளையைப் பாட வைத்தது நடனமாடி நடிக்க வைத்ததைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன் .அந்த பிள்ளையை நான் வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
மாதா பிதா குரு தெய்வம் என்பார்கள். என்னைக்கேட்டால் மாதா பிதா மூன்றும் சேர்ந்ததுதான் தெய்வம் என்பேன். அவர்களே தெய்வ வடிவில் இருப்பதாக நான் நினைப்பேன். அப்படித்தான் யோகேஸ்வரனுக்கு அவனது பெற்றோர் அமைந்திருக்கிறார்கள் .குருவும் இருக்கிறார். இந்த ‘ஹே சகோ ‘பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றார்.
இந்த பாடல் ஆல்பத்திற்கு வரிகள் எழுதி இசை அமைத்து இயக்கியிருக்கும் ஜெய் கிருஷ் கதிர் பேசும்போது,
” முதலில் ஒரு பாடல் இசையமைப்பதாகத்தான் இருந்தது. இப்படி ஒரு ஆல்பம் தயாரிப்பதாக எண்ணம் இல்லை .ஆனால் போகப்போக அதை உருவாக்க வேண்டுமென்று யோகேஸ்வரனின் பெற்றோர்கள் விரும்பியபோது பட்ஜெட் பற்றி எந்த எல்லையும் குறிப்பிடாமல் அவர்கள் செலவு செய்தார்கள் .எனக்கு முழுமையான சுதந்திரம் கொடுத்தார்கள். நானே இயக்கி பாடலை உருவாக்கி இருக்கிறேன். உங்கள் ஆதரவு தேவை” என்று கூறினார்.
இந்த விழாவில் எஸ் பேங்க் மேலாளர் தினேஷ்குமார், வாஸ்கோடகாமா படத்தின் தயாரிப்பாளர் சுபாஸ்கரன், ஜெம் டிவி சீதாபதி,ஒளிப்பதிவாளர் இளையராஜா, படத்தொகுப்பாளர் ராஜா, இயக்குநர் விமர்சகர் கேபிள் சங்கர், ஆல்பத்தில் நடித்துள்ள நடிகை சரண்யா ரவிச்சந்திரன், யோகேஸ்வரனின் தந்தை ரகுராமன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.முன்னதாக வந்திருந்தவர்களை யோகேஸ்வரனின் தாயார் சங்கீதா வரவேற்றார்.