சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகிய திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோயில் தலம் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும்.உலகப்புகழ்பெற்ற இத்தலத்தின் மூலவர் அருணாசலேசுவரர் என்றும், அம்பிகை உண்ணாமுலையாள் என்றும் அழைக்கப்படுகிறார்கள் .
நினைத்தாலே முக்தி தரும் இந்த தலம் பற்றிய புராணம் யாதெனில் ,நான்முகனுக்கும் திருமாலுக்கும் தங்களுக்குள் யார் பெரியவர் என வாக்குவாதம் ஏற்பட , இடையில் நெருப்புப் பிழம்பு தோன்ற நம்மில் யார் இதன் அடியையும் முடியையும் கண்டறிகிறாரோ அவரே நம்மில் பெரியவர் என உரைத்தனர். அதன் அடியைக் காண, திருமால் வராக வடிவெடுத்து நிலத்தினைக் குடைந்து சென்று பல காலம் பயணம் செய்தும் அடியைக் காண இயலாமல் திரும்ப, அன்னம் வடிவமெடுத்து முடியைக் காணச்சென்ற நான்முகன் , வானிலிருந்து கீழே வரும் தாழம்பூவிடம் நீ எங்கிருந்து வருகிறாய் என கேட்க அதற்கு அது நான் சிவனாரின் தலையிலிருந்து பல ஆண்டுகளாக விழுந்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியது , தாழம்பூவிடம் நீ திருமாலிடம், நான் இந்த நெருப்புப் பிழம்பாக நின்ற சிவனின் முடியைக் கண்டுவிட்டேன் எனக் கூறும்படி கேட்டார் நான்முகன். தன்னால் அடியைக் காண முடியாததை ஒப்புக் கொண்ட திருமாலிடம், நான்முகன் தான் சிவபெருமானின் முடியைக் கண்டுவிட்டதாகவும், அதற்கு இந்தத் தாழம்பூவே சாட்சி என்றும் கூற, சினமுற்ற சிவன், பத்மகற்பத்தில் நான்முகன் திருமாலின் உந்தி கமலத்தில் தோன்றுவார் எனவும் , தாழம்பூ சிவவழிபாட்டில் இனிமேல் பயன்படாது எனவும் உரைத்தார். தாழம்பூ, தன்னிடம் மன்னிப்பு கேட்டதற்கிணங்கிய சிவன், நான் இந்த பூமியில் எனது பக்தைக்காகக் குழந்தையாக அவதரித்த உத்திர கோசமங்கைஎன்னும் திருத்தலத்தில் மட்டும் பயன்படுவாய் எனவும் அருளினார். திருமாலால் தன்னை அளக்க இயலாததால் திருமாலை சிறியவரென உரைப்பார்களெனவும், பிரம்மா கேட்ட மன்னிப்பினால் அவருக்கு வழிபாடு நிகழவேண்டி சிவபெருமான் சிவலிங்கத்தின் அடிப்பாகத்தில் நான்முகனார் , நடுப்பாகத்தில் திருமால், மேல்பாகத்தில் சிவனும் நின்று சிவலிங்கமாகத் தோன்றினர். தன்னை நோக்கித் தவம் செய்த பார்வதியைத் தன்னுடைய இடப்பாகத்தில் அமர்த்தி அர்த்தநாரீஸ்வரராய் நின்ற பெருமைக்கு உரிய தலமே இத்தலம் ஆகும்.
“திருஅண்ணாமலையை நினைக்க முக்தி” என்னும் அளவிற்க்கு அவ்வளவு சிறப்பு வாய்ந்த திருத்தலம்.
இத்தலத்தினை பற்றி அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோர் தேவாரம் பதிகங்களைப் பாடியுள்ளார்கள். இத்தலத்தின் முருகன் மீது அருணகிரி நாதர் பாடல்களைப் பாடியுள்ளார். இத்தலத்தில் சிவபெருமானே இங்கு மலையாக உள்ளதாக கருதும் சிவபக்தர்கள் இம்மலையை கிரிவலம் வருதலைக் செய்து சிவனின் அருளை பெறுகிறார்கள். சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி. காசியில் நீராடினால் முக்தி. ஆனால் திருவண்ணாமலையை இருந்த இடத்திலிருந்து நினைத்தாலே முக்தி கிடைத்துவிடும். ஒரு முறை இந்த தலத்திற்கு சென்றால் மீண்டும் மீண்டும் சென்று தரிசிப்பதற்குரிய வாய்ப்பு கிடைக்கும்.